மணிப்பூரை போல மேற்கு வங்காளத்திலும் 2 பெண்களை நிர்வாணமாக்கி அடித்து உதைத்ததாக பா.ஜனதா குற்றச்சாட்டு; திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு

மேற்கு வங்காளத்தில் 2 பெண்களை நிர்வாணமாக்கி அடித்து உதைத்ததாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. இதை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்து உள்ளது.

Update: 2023-07-22 19:00 GMT

உடைகளை கிழிக்கும் வீடியோ

மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள கடைத்தெரு ஒன்றில் 2 பெண்களை ஏராளமான பெண்கள் சேர்ந்து தாக்கி, உடைகளை கிழித்து நிர்வாணமாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. பகுவா ஹாட் பகுதியில் கடந்த 19-ந் தேதி நடந்த இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசு மீது பா.ஜனதா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. இந்த வீடியோவை தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ள கட்சியின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா, இது தொடர்பாக கூறியிருந்ததாவது:-

போலீசார் வேடிக்கை பார்த்தனர்

மேற்கு வங்காளத்தில் பயங்கரம் தொடர்கிறது. 2 பழங்குடி இன பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு உள்ளனர். பகுவா ஹாட் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை போலீசார் அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளனர். சமூகத்தில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த அந்த பெண்கள் மீது ஒரு வெறித்தனமான கும்பல் பாய்ந்துள்ளது. முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் இதயத்தை 'உடைத்திருக்க' வேண்டிய ஒரு சோகத்தின் அனைத்து அம்சங்களையும் இது கொண்டிருந்தது. அவர் மாநிலத்தின் உள்துறை மந்திரியாகவும் இருப்பதால், அவர் கோபப்படுவதற்கு பதிலாக, செயல்பட்டிருக்கலாம்.

இவ்வாறு அமித் மால்வியா குறிப்பிட்டு இருந்தார்.

மந்திரி விளக்கம்

பா.ஜனதாவின் இந்த குற்றச்சாட்டை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மறுத்து உள்ளது.

இது தொடர்பாக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஷசி பஞ்சா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இது ஒரு திருட்டு சம்பவம். அங்குள்ள சந்தையில் இருந்து சில பொருட்களை இந்த பெண்கள் திருட முயன்றுள்ளனர். அதை கையும் களவுமாக பிடித்த பெண்கள், அவர்களை தாக்கியுள்ளனர். சட்டத்தை தங்கள் கையிலேயே எடுத்துள்ளனர்' என தெரிவித்தார். எனினும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று அந்த பெண்களை விடுவித்ததாகவும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரத்தை தேவையின்றி பா.ஜனதா அரசியல் ஆக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மகளிர் ஆணையம் கடிதம்

இதற்கிடையே இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யுமாறு தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இதைப்போல குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில தலைமை செயலாளருக்கும் அவர் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவர் மானபங்கம் செய்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மேற்கு வங்காளத்திலும் அதைப்போன்ற சம்பவம் நடந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்