மக்கள் பிரச்சினைகளை விவாதிப்பதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்போம் - காங்கிரஸ் அறிவிப்பு
மக்கள் பிரச்சினைகளை விவாதிப்பதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்போம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் வியூக கூட்டம் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பத்திரிகையாளர்களிடம் இதுகுறித்து கூறுகையில், "எதிர்க்கட்சிகளை அரசாங்கம் நம்பிக்கைக்கு எடுத்துக்கொள்ளாதது மற்றும் வரவிருக்கும் கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்காதது இதுவே முதல்முறை.
மக்கள் அக்கறை கொண்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். அந்த பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதும், இந்த உணர்வுடன் இந்த சிறப்பு அமர்வில் பங்கேற்க வேண்டும் என்பதும் எங்களது கோரிக்கையாக இருக்கும்.
மோடி புகழ்ச்சியை கேட்க மட்டும் நாங்கள் உட்காரப் போவதில்லை. நாங்கள் நிச்சயமாக அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்போம், ஒவ்வொரு அமர்விலும் எங்கள் பிரச்சினைகளை எழுப்ப முயற்சிப்போம்" என்றார்.