ஒற்றை காட்டுயானையை 8-ந் தேதிக்குள் பிடித்து விடுவோம்; வனத்துறை அதிகாரி சீனிவாசன் பேட்டி
கொப்பா தாலுகாவில் தொடர் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டுயானையை வருகிற 8-ந் தேதிக்குள் பிடித்து விடுவோம் என்று வனத்துறை அதிகாரி சீனிவாசன் கூறினார்.;
சிக்கமகளூரு;
ஒற்றை காட்டுயானை
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஹனூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் அந்த காட்டுயானை கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடிவிடுகிறது.
இதனால் கிராம மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். மேலும் காட்டுயானையின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் அந்த காட்டுயானையை பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள், வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.
பிடிக்க நடவடிக்கை
அதன்பேரில் அந்த காட்டுயானை குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த காட்டுயானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ரேடியோ காலர் மூலம் ஆய்வு மேற்கொண்டதில் அந்த காட்டுயானை இரவு நேரத்தில் மட்டும் கிராமங்களுக்குள் புகுந்தும், விளைநிலங்களுக்குள் புகுந்தும் அட்டகாசம் செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து அந்த காட்டுயானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரி சீனிவாசன் தெரிவித்தார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
8-ந் தேதிக்குள் பிடித்து விடுவோம்
ஒற்றை காட்டுயானையின் தொடர் அட்டகாசத்தால் ஹானூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் பீதியில் உள்ளனர். தற்போது யானையை பிடிக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.அனுமதி கிடைத்ததும் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு அந்த காட்டுயானையை பிடிக்கும் பணி நடைபெறும்.
வருகிற 1-ந் தேதி(அதாவது நாளை) முதல் 8-ந் தேதிக்குள் அந்த ஒற்றை காட்டுயானையை பிடித்து விடுவோம். இதனால் கிராம மக்கள் பீதி அடைய வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.