அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை பூஜ்ஜியம் ஆக்குவோம் - மம்தா பானர்ஜி

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை பூஜ்ஜியம் ஆக்குவோம் என மம்தா பானர்ஜி கூறினார்.

Update: 2023-04-24 18:34 GMT

நிதிஷ்குமார் ஒருங்கிணைப்பு

அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக கூட்டாக தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டு உள்ளார்.

இதற்காக மாநில துணை முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வியுடன் சமீபத்தில் டெல்லி சென்றிருந்தார். அங்கு அவர் காங்கிரஸ் தலைவர்கள், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

மம்தா பானர்ஜியுடன் சந்திப்பு

இதன் தொடர்ச்சியாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியை சந்திக்க நேற்று கொல்கத்தா சென்றார். அவருடன் தேஜஸ்வியும் உடன் சென்றார்.

மேற்கு வங்காள தலைமை செயலகமான நபண்ணாவில், மம்தா பானர்ஜியை அவர்கள் சந்தித்து பேசினர். அப்போது 2024-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து அவர்கள் விரிவாக விவாதித்தனர்.

பின்னர் 3 பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது:-

இணைந்து செயல்படுவோம்

அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரிய பூஜ்ஜியமாகும். பா.ஜனதாவை நாங்கள் பூஜ்ஜியமாக சுருக்கி விடுவோம்.

ஊடகங்கள் மற்றும் பொய்களின் துணையுடன் அவர்கள் மிகப்பெரிய ஹீரோவாக உள்ளனர். பா.ஜனதா பூஜ்ஜியமாக வேண்டும் என விரும்புகிறேன்.

நாங்கள் எல்லாரும் இணைந்திருக்கிறோம் என்ற செய்தியை கொடுக்க வேண்டும். அனைவரும் கூட்டாக இணைந்து செயல்படுவோம். எண்ணம், பார்வை, பணி ஆகியவை தெளிவாக இருந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது.

காங்கிரஸ் இருக்குமா?

நிதிஷ் குமாரிடம் ஒரேயொரு கோரிக்கை மட்டும் வைத்துள்ளேன். அதாவது, ஜெயப்பிரகாஷ்ஜியின் இயக்கம் பீகாரில் இருந்துதான் தொடங்கியது. அதைப்போல பீகாரில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யலாம். பொய்கள் மற்றும் குற்றச்செயல்களை பா.ஜனதா கொண்டிருக்கிறது.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அனைத்து கட்சிகளும் இருக்கும் என்று மம்தா பானர்ஜி பதில் அளித்தார்.

நேர்மறையான விவாதம்

இந்த நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பேசும்போது, 'மூன்று தலைவர்களும் மிகவும் நேர்மறையான விவாதத்தை நடத்தினோம். வரும் தேர்தலுக்கு முன்னதாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம். எதிர்க்கட்சிகள் ஒன்றாக அமர்ந்து வியூகம் வகுக்க வேண்டும்' என்று கூறினார்.

தற்போதைய ஆட்சியில் அவர்களின் சொந்த விளம்பரத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என குற்றம் சாட்டிய நிதிஷ்குமார், தேசத்தின் வளர்ச்சிக்காக எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.

அகிலேஷ் யாதவ், நவீன் பட்நாயக்

பா.ஜனதாவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் மம்தா பானர்ஜி இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் நிதிஷ்குமாரை சந்தித்து எதிர்க்கட்சி ஒற்றுமை குறித்து அவர் பேசியிருப்பதன் மூலம், இந்த கூட்டணியில் அவர் இணைவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக எதிர்க்கட்சி கூட்டணி தொடர்பாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரியும், மதசார்பற்ற ஜனதாதள தலைவருமான குமாரசாமி ஆகியோரை கடந்த மாதம் மம்தா பானர்ஜி சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்