கர்நாடகத்தில் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பஜ்ரங்க தளத்திற்கு தடை விதிப்பதாக கூறியுள்ள காங்கிரசை கண்டித்து விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-04 23:21 GMT

பெங்களூரு:-

ஆர்ப்பாட்டம்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தனது பிரசார கூட்டத்தில் பேசும்போது, 'பஜ்ரங்பலி' என்று முழக்கமிட்டு ஆதரவு தெரிவித்து வருகிறார். மேலும் அவர் காங்கிரசுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஆஞ்சநேயர் பக்தர்களை காங்கிரஸ் அவமதித்துவிட்டதாக அவர் ஆவேசமாக பேசினார்.

இந்த நிலையில் காங்கிரசை கண்டித்து பஜ்ரங்தள, விசுவ இந்து பரிஷத் (வி.எச்.பி.) போன்ற இந்து அமைப்பினர் கர்நாடகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைநகர் பெங்களூரு, சிக்பள்ளாப்பூர், ஸ்ரீரங்கப்பட்டணா, மண்டியா, சிக்கமகளூரு உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீரங்கப்பட்டணாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பஜ்ரங்தள அமைப்பினர் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை செருப்பால் அடித்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். அந்த அமைப்பினர் மற்றும் பா.ஜனதாவினர் ஆஞ்சநேயர் கோவில்களில் கூடி ஆஞ்சநேயர் மந்திரத்தை கூறி முழக்கமிட்டனர்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், 'சட்டத்தை தனிநபரோ அல்லது பஜ்ரங்தள, பி.எப்.ஐ. உள்ளிட்ட அமைப்புகளோ மீற முடியாது. வெறுப்பு, விரோதத்தை பரப்புகிறவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுப்போம்' என்றனர்.

இதற்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி, 'காங்கிரஸ் முன்பு கடவுள் ராமருக்கு தடை விதித்தனர். இப்போது அனுமனுக்கு தடை விதிக்கிறார்கள். ஜெய் பஜ்ரங்பலி' என்று முழக்கமிட்டு காங்கிரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்