ஓடும் ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த பயணி - சரியான நேரத்தில் காப்பாற்றிய பெண் காவலர்
ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணியை, பிளாட்பாரத்தில் இருந்த பெண் காவலர் சரியான நேரத்தில் காப்பாற்றினார்.;
ஜாம்ஷெட்பூர்,
ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடாநகர் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணியை, பிளாட்பாரத்தில் இருந்த பெண் காவலர் சரியான நேரத்தில் காப்பாற்றினார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளை ரெயில்வே பாதுகாப்பு படை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அந்த வீடியோவில், சில பயணிகள் ஓடும் ரெயிலில் ஏற முயல்கின்றனர். அப்போது அவர்களில் ஒருவர் தவறி விழுந்தார். இந்த நிலையில் பிளாட்பாரத்தில் இருந்த பெண் காவலர் சரியான நேரத்தில் ஓடி வந்து அந்த நபரை காப்பாற்றினார். பின்னர், அந்த நபர் அவரது பொருட்களுடன் அதிகாரியின் உதவியுடன் ரெயிலில் ஏறி செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. ஓடும் ரெயிலில் ஏறவோ இறங்கவோ கூடாது என்று இந்திய ரெயில்வே மக்களை எச்சரித்தாலும், சிலர் அதைக் கேட்காமல் மீண்டும் மீண்டும் இதுபோன்று செய்கின்றனர்.