ஒரே மாதத்தில் இது 3-வது முறை: மாடு மீது மோதி விபத்துக்குள்ளானது வந்தே பாரத் ரெயில்

ஒரே மாதத்தில் 3-வது முறையாக மாடு மீது மோதி வந்தே பாரத் ரெயில் விபத்துக்குள்ளானது.

Update: 2022-10-29 21:07 GMT

பிரதமர் தொடங்கிய ரெயில்

பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தின் தலைநகராக காந்தி நகரையும், நாட்டின் நிதித்தலைநகரமான மும்பையையும் இணைக்கும் வந்தேபாரத் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த ரெயில் 'மேக் இன் இந்தியா' என்னும் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து உருவாக்கப்பட்டதாகும். விரைவான பயணம் என்பதால் இந்த ரெயில் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்தடுத்து விபத்து

கடந்த 6-ந் தேதியன்று, இந்த ரெயில் மும்பையில் இருந்து காந்திநகர் செல்லும் வழியில், குஜராத்தின் வத்வா-மணிநகர் ரெயில் நிலையங்களுக்கு இடையே 4 எருமைமாடுகள் மீது மோதியது. இந்த மாடுகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக செத்தன.

இந்த விபத்தில், விபத்துக்கு காரணமான எருமை மாடுகளின் உரிமையாளர் மீது ரெயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த ரெயிலின் முகப்பு பகுதி (நோஸ் பேனல்) இரவோடு இரவாக மாற்றப்பட்டது. ஆனால் மறுநாளே அந்த ரெயில் மீண்டும் விபத்தை சந்தித்தது.

இந்த முறை, காந்தி நகரில் இருந்து மும்பைக்கு செல்லும் வழியில், குஜராத்தின் ஆனந்த் அருகே பசுமாட்டின் மீது அந்த ரெயில் மோதி விபத்து நேரிட்டது.

3-வது முறையாக...

அடுத்தடுத்து 2 முறை கால்நடைகள் மீது வந்தேபாரத் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்துக்குள்ளான சுவடு மறைவதற்கு முன்பாக, நேற்று 3-வது முறையாக அந்த ரெயில் விபத்தை எதிர்கொண்டது. இந்த முறையும் கால்நடை மூலம்தான் அந்த ரெயிலுக்கு சோதனை வந்துள்ளது.

மும்பையில் இருந்து காந்தி நகர் செல்லும் வழியில் நேற்று காலை 8.20 மணிக்கு குஜராத்தின் அதுல் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தையொட்டி வந்த மாடு மீது மோதியது. இதில் ரெயிலின் முன்பகுதி (பிரண்ட் பேனல்) சேதம் அடைந்தது. முதல் பெட்டியின் அடிபாகங்களும் பாதிப்புக்குள்ளாயின. இதனால் அந்த ரெயில்சேவையில் 20 நிமிடம் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த ரெயில், காந்தி நகர் நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது.

3 முறை அடுத்தடுத்து கால்நடைகள் மீது மோதி விபத்தை சந்தித்தாலும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது கோடிட்டுக்காட்டத்தக்கது. இருப்பினும், தொடர்ந்து கால்நடைகள் மீது மோதி விபத்துகளை சந்தித்து வருவது குஜராத்தில் பொதுமக்கள் இடையே பேசுபொருளாக மாறி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்