மாநிலங்களவையில் தொடர் அமளி: தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேர் உள்பட 19 எம்.பி.க்கள் இடைநீக்கம்

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட தாக 6 தி.மு.க. எம்.பி.க்கள் உள்பட 19 எதிர்க்கட்சி எம்.பி.க்கள், இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2022-07-27 00:24 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் நேற்று முன்தினம் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஒத்திவைப்பு

இந்நிலையில், மாநிலங்களவை நேற்று கூடியவுடன், விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, குஜராத் கள்ளச்சாராய சாவு ஆகிய பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியை தொடங்கினர்.

இதனால், எந்த அலுவலும் எடுத்துக்கொள்ளப்படாதநிலையில், சபைத்தலைவர் வெங்கையா நாயுடு, சபையை பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார்.

எச்சரிக்கை

பின்னர் சபை கூடியபோது, துணைத்தலைவர் ஹரிவன்ஷ் கேள்விநேரத்தை நடத்த முயன்றார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் சபையை ஒத்திவைத்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சபை கூடியபோது, சில உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். அவர்களை இருக்கைக்கு செல்லுமாறு துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீண்டும் மீண்டும் எச்சரித்தார்.

19 பேர் இடைநீக்கம்

அவர்கள் கேட்காததால், இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்யுமாறு ஆளும் தரப்பை கேட்டுக்கொண்டார். அதன்படி, 10 எம்.பி.க்களை இந்த வாரம் முழுவதும் (29-ந்தேதிவரை) இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி முரளீதரன் தாக்கல் செய்தார். அவைக்கும், சபை துணைத்தலைவரின் அதிகாரத்துக்கும் அவமரியாதை செய்து தவறாக நடந்து கொண்டதால், அவர்கள் நீக்கப்படுவதாக அவர் கூறினார்.

அந்த தீர்மானம், ஓட்டெடுப்புக்கு வந்தபோது, மொத்தம் 19 எம்.பி.க்கள் பெயர்களை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் வாசித்தார். பிறகு குரல் ஓட்டெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க.

இடைநீக்கம் செய்யப்பட்ட 19 எம்.பி.க்களில் 6 தி.மு.க. எம்.பி.க்களும் அடங்குவர். முகமது அப்துல்லா, கனிமொழி சோமு, எம்.சண்முகம், கல்யாணசுந்தரம், கிரிராஜன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அந்த தி.மு.க. எம்.பி.க்கள் ஆவர்.

திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த சுஷ்மிதா தேவ், மவுசம் நூர், சாந்தா சேத்ரி, டோலா சென், சாந்தனு சென், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், நடிமுள் ஹேக் ஆகிய 7 எம்.பி.க்களும், தெலுங்கானா ராஷ்டிர சமிதியை சேர்ந்த லிங்கையா யாதவ், ரவிச்சந்திர வத்திராஜூ, தாமோதர்ராவ் திவகொண்டா ஆகிய 3 எம்.பி.க்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வி.சிவதாசன், ஏ.ஏ.ரகிம் ஆகிய 2 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சந்தோஷ்குமாரும் என மொத்தம் 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தர்ணா

அவர்களை சபையை விட்டு வெளியேறுமாறு துணைத்தலைவர் ஹரிவன்ஷ் உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் வெளியேற மறுத்து, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், சபையை 15 நிமிட நேரம் ஹரிவன்ஷ் ஒத்திவைத்தார்.

பின்னர் சபை கூடியபோதும், 19 எம்.பி.க்களும் வெளியேற மறுத்தனர். இதனால், சபை 1 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு சபை கூடியபோது, சபைத்தலைவர் இருக்கையில் புவனேஸ்வர் கலிடா இருந்தார்.

19 எம்.பி.க்கள் இடைநீக்கத்தை எதிர்த்து, ''எங்களுக்கு நீதி வேண்டும்'' என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அமளி தொடர்ந்ததால், சபையை நாள் முழுவதும் கலிடா ஒத்திவைத்தார்.

மக்களவை

மக்களவை நேற்று காலை கூடியவுடன், காங்கிரஸ் எம்.பி.க்கள், சோனியாகாந்திக்கு எதிராக அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி அமளியில் ஈடுபட்டனர். தி.மு.க., தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு பிரச்சினையை எழுப்பினர்.

அவர்களை இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் ஓம்பிர்லா வலியுறுத்தினார். இருப்பினும் அவர்கள் கேட்காததால், காலை 11.45 மணிவரை அவர் சபையை ஒத்திவைத்தார்.

வெளிநடப்பு

11.45 மணிக்கு சபை கூடியபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள், காங்கிரஸ் தலைமையகத்துக்கு சென்று விட்டனர். தி.மு.க., தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள், எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறு சபையின் மையப்பகுதியில் அமளியில் ஈடுபட்டனர்.

தங்களை பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அனுமதி கிடைக்காததால், வெளிநடப்பு செய்தனர்.

பகல் 12 மணிக்கு அவர்கள் மீண்டும் சபைக்குள் வந்தனர். எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறு மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

கனத்த இதயத்துடன் எடுத்த முடிவு

19 எம்.பி.க்கள் இடைநீக்கம் குறித்து மாநிலங்களவை முன்னவரும், மத்திய மந்திரியுமான பியூஷ்கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

19 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் முடிவு, கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து வந்ததும், விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. எதிர்க்கட்சிகள்தான் விவாதிப்பதில் இருந்து தப்பி ஓடுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த நவம்பர் மாதம், 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், 19 பேர் ஒரே நேரத்தில் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்