ராகுல் காந்தி சட்டத்திற்கு மேலானவரா? - கடுமையாக சாடிய மத்திய மந்திரி

ராகுல் காந்தி சட்டத்திற்கு மேலானவரா என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பினார்.

Update: 2023-03-29 17:09 GMT


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று கடும் விமர்சனம் செய்தார். ராகுல் காந்தியின் ஆணவத்தால், அவர் மக்களவை எம்.பி., தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும், ராகுல் காந்தி சட்டத்திற்கு மேலானவரா என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக நீதிமன்றம் ராகுல் காந்தியை தண்டித்திருக்கிறது. ஆனால், நீதிமன்றம் செய்தது தவறு என அவர் கூறுகிறார்.

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்துவிட்டதாலேயே இந்த நாட்டை ஆட்சி செய்வது தனது பிறப்புரிமை என ராகுல் காந்தி கருதுகிறார். அரசியல் சாசனம், நீதிமன்றம், நாடாளுமன்றம் என அனைத்திற்கும் மேலாக ராகுல் காந்தி தன்னை கருதிக்கொள்கிறார். நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் மேலாக அவர் தன்னை கருதிக்கொள்கிறார். எந்த ஒரு நீதிமன்றமும் தனக்கு எதிராக தீர்ப்பளிக்க முடியாது என அவர் எண்ணுகிறார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ராகுல் தண்டிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தான் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்துள்ளதால் அந்த சட்டம் தனக்கு பொருந்தாது என அவர் நினைக்கிறார். ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டதற்குக் காரணம் அவரது ஆணவம்தான். எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, அனைத்து ஊழல்வாதிகளும் தற்போது ஒரு குடையின் கீழ் வந்திருக்கிறார்கள்.

அவர்களின் ஒரே நோக்கம் இந்த அரசை நாட்டில் தற்போது உருவாகி இருக்கிற புதிய எழுச்சியை தடம் புரளச் செய்ய வேண்டும். தொந்தரவு செய்ய வேண்டும் என்பதுதான். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் எந்த அளவுக்கு நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பதையும், அரசு அமைப்புகள் எந்த அளவுக்கு பலவீனப்படுத்தப்பட்டன என்பதையும் இவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்" என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்