தொழில் அதிபர் ரத்தன் டாடா இறுதி சடங்கில் மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்பு

மராட்டியத்தில், அனைத்து அரசு கட்டிடங்களிலும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

Update: 2024-10-10 07:36 GMT

புதுடெல்லி,

பிரபல இந்திய தொழில் அதிபர் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் நேற்றிரவு சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 86.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரத்தன் டாடாவின் உடல் மீது இந்திய தேசிய கொடி போர்த்தப்பட்டு உள்ளது. அவருடைய உடல் மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி டாடா அறக்கட்டளை வெளியிட்டு உள்ள அறிவிப்பு ஒன்றில், ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கும் என தெரிவித்து உள்ளது. அவருடைய இறுதி சடங்கில் மத்திய அரசு சார்பில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்க உள்ளார். ரத்தன் டாடாவின் உடலுக்கு மராட்டிய அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று மராட்டிய முதல்-மந்திரி அலுவலக செய்தி தெரிவிக்கின்றது.

அனைத்து அரசு கட்டிடங்களிலும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும், அரசு சார்ந்த கலாசார அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சி எதுவும் இன்று நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்