அரியானாவில் லாரி ஏற்றி டி.எஸ்.பி. படுகொலை; பரபரப்பு ஏற்படுத்திய சம்பவத்தில் 9 பேர் கைது

அரியானாவில் பரபரப்பு ஏற்படுத்திய லாரி ஏற்றி டி.எஸ்.பி. படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-07-26 13:28 GMT



சண்டிகர்,



நாட்டின் தலைநகர் புதுடெல்லிக்கு அருகே அமைந்துள்ள அரியானாவில் ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகில் உள்ள பச்கான் என்ற இடத்தில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன என போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.

இதனை தொடர்ந்து, கடந்த 19ந்தேதி காலை 11 மணியளவில் துணை போலீஸ் சூப்பிரெண்டு சுரேந்திரா சிங் பிஷ்னோய், தனது போலீஸ் குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றார்.

போலீசாரை கண்டதும், சட்டவிரோத சுரங்க பணியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அப்போது அந்த அதிகாரி நடுவழியில் நின்றுகொண்டு, கல் ஏற்றி சென்ற வாகனங்களை நிறுத்துமாறு சைகை காட்டினார். ஆனால் அதில் ஒரு லாரியின் டிரைவர் அவர் மீது லாரியை ஏற்றினார். இதில் அந்த அதிகாரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்து விட்டார்.

இதுபற்றி டி.எஸ்.பி.யின் சகோதரர் மக்கன் சிங் கூறும்போது, தொலைபேசி அழைப்பு வந்த பின் அந்த பகுதிக்கு அவர் சென்றுள்ளார். அது எனது சகோதரரின் வேலையல்ல. இதன் பின்னால் பெரிய சதி திட்டம் உள்ளது. சுரங்க துறை உள்பட உயரதிகாரிகள் இதன் மீது விசாரணை நடத்த வேண்டும்.

சகோதரருக்கு வந்த தொலைபேசி அழைப்பு பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். துணிச்சலான, நேர்மையான அதிகாரியான சுரேந்திராவுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அவருடன் பாதுகாப்புக்கு சென்ற துப்பாக்கி ஏந்திய அதிகாரியிடமும், (சம்பவத்தின்போது குதித்து தப்பி விட்டார்) விசாரணை நடத்த வேண்டும் என கூறினார்.

அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததோடு, காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினருக்கு இரங்கலும் வெளியிட்டார்.

2021-22 ஆம் ஆண்டிற்கான அரியானா பொருளாதார ஆய்வறிக்கையின்படி, 2014-15 முதல் செப்டம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில், முறையான அனுமதி ஆவணங்கள் இல்லாமல் கனிம வளங்களை வெட்டி செல்வது உட்பட மொத்தம் 21,450 சட்டவிரோத சுரங்க வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மீறி, ஆரவல்லி பகுதியில் பல இடங்களில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவது தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போலீஸ் சூப்பிரெண்டு வருண் சிங்ளா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, டி.எஸ்.பி. படுகொலையில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களில் கூடுதலாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 24ந்தேதி (ஞாயிற்று கிழமை) தபீர் என்ற பைரா கைது செய்யப்பட்டார். நேற்று அர்ஷத் (லாரி உரிமையாளரின் மகன்) மற்றும் அப்பாஸ் என்ற தொழிலாளி கைது செய்யப்பட்டனர்.

இதுவரை மொத்தம் 12 பேரில் 9 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 3 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். கோர்ட்டு உத்தரவின்படி வழக்கு தொடர்ந்து நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். கடந்த 19ந்தேதி பிஷ்னோய் கொல்லப்பட்ட பின் அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி கட்டார் அறிவிப்பு வெளியிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்