'மும்பை புறநகர் ரெயிலில் செல்வது போருக்கு செல்வது போல் இருக்கிறது' - மும்பை ஐகோர்ட்டு அதிருப்தி
மும்பை புறநகர் ரெயிலில் பயணம் செய்வது போருக்கு செல்வதைப் போல் உள்ளது என மும்பை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.
மும்பை,
மும்பை புறநகர் ரெயில்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனிடையே கூட்ட நெரிசல் மற்றும் ரெயில் விபத்துகளில் சிக்கி கடந்த ஆண்டு 2,590 பயணிகள் உயிரிழந்ததாகவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, நீதிபதி அமித் போர்கார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மும்பை புறநகர் ரெயிலில் பயணம் செய்து கல்லூரிக்கோ அல்லது வேலைக்கோ செல்வது என்பது போருக்கு செல்வதைப் போல் உள்ளது என வேதனை தெரிவித்தனர்.
அப்போது மேற்கு ரெயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் குமார், கடந்த 2008-ம் ஆண்டு முதல் பல்வேறு பொதுநல வழக்குகளில் கோர்ட்டு வழங்கிய வழிகாட்டுதல்களின்படி ரெயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையிலான இடைவெளியை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கு ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் இந்த நடவடிக்கைகள் எந்த அளவிற்கு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் ரெயில்களில் பொதுமக்கள் ஆடு, மாடுகளைப் போல் அல்லது அதை விட மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்றும், பொதுமக்களின் உயிரைக் காக்க உத்தரவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தனர். அதோடு, இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மற்றும் மத்திய ரெயில்வே நிர்வாகங்களின் பொது மேலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.