விளை நிலத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயிற்சி விமானம்; விமானி உள்பட 2 பேர் உயிர் தப்பினர்

நடுவானில் பறந்த போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயிற்சி விமானம் ஒன்று அவசர, அவசரமாக விளை நிலத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் விமானி உள்பட 2 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.

Update: 2023-06-25 21:54 GMT

பெங்களூரு:

நடுவானில் பறந்த போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயிற்சி விமானம் ஒன்று அவசர, அவசரமாக விளை நிலத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் விமானி உள்பட 2 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.

பயிற்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தாலுகா சிரூர் கிராமத்தில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில், தனியார் நிறுவனம் சார்பில் விமான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் விமானங்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

அப்போது அங்கிருந்த விமானி மற்றும் பயிற்சி விமானியுடன் ஒரு விமானம் புறப்பட்டது. இந்த நிலையில் அந்த விமானம் பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

விளைநிலத்தில் தரையிறக்கம்

இதுகுறித்து அறிந்த விமானி உடனடியாக அந்த பகுதியில் உள்ள விளைநிலத்தில் விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கினார். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட உடனேயே துரிதமாக விமானி செயல்பட்டதால் விபத்து ஏதும் ஏற்படாமல் விமானம் தரையிறக்கப்பட்டது. மேலும் விமானத்தில் இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து விமான நிலையத்திற்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

இதற்கிடையே விளைநிலத்தில் விமானம் தரையிறங்கியதும், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு குவிந்தனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த விமான நிறுவன அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டனர்.

அதிகாரிகள் விசாரணை

மேலும் போலீசார் விமானிகளிடம் விசாரித்தனர். அவர்கள் கூறுகையில், 'விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனே விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் போதிய உயரத்தில் விமானம் செல்லாததால் பாராசூட் மூலம் இறங்குவது ஆபத்து என்பதை அறிந்தோம். அதனால் காலியாக இருந்த விளைநிலத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்கினோம்' என்றனர். வானில் பறந்த போது பயிற்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து விமான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே மாதத்தில் 3-வது சம்பவம்

கடந்த மாதம் (மே) 30-ந்தேதி பெலகாவியில் ராணுவ பயிற்சி விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக விளைநிலத்தில் தரையிறக்கப்பட்டது. இதில் அந்த விமானத்தின் சக்கரங்கள் சேதமடைந்தன.

அதன்பிறகு ஜூன் 1-ந்தேதி பெங்களூரு எச்.ஏ.எல். விமானப்படை தளத்துக்கு சொந்தமான, பயிற்சி விமானம் ஒன்று நடுவானில் பறந்த போது தொழில்நுட்ப கோளாறால் தீப்பிடித்து சாம்ராஜ்நகர் மாவட்டம் போகபுரா கிராமத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானி, பயிற்சி பெண் விமானி 2 பேரும் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர். தற்போது கலபுரகியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனியார் பயிற்சி விமானம் விளைநிலத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஒரே மாதத்தில் 3 பயிற்சி விமானங்கள் நடுவானில் பறந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்