கோலாரில் தக்காளி விலை குறைந்தது
கோலாரில் தக்காளி விலை குறைந்துள்ளது. ரூ.100-க்கு 12 கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
கோலார் தங்கவயல்
தக்காளி
கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் தக்காளி விலை விண்ணைத்தொடும் அளவிற்கு கிடுகிடுவென உயர்ந்தது. இந்த விலை உயர்வை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு கிலோ தக்காளி ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை ஆனது. இதனால் தோட்டங்களில் தக்காளி திருட்டு அதிகரித்தது.
அதேபோல், தக்காளியை வெளி மாநிலங்களுக்கு ஏற்றிச் செல்லும் டிரைவர்கள், கிளீனர்களை தாக்கி தக்காளியை திருடும் சம்பவங்களும் அதிகரித்தது.
தக்காளியை பாதுகாக்க விவசாயிகள் தங்களது தோட்டங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். மேலும் வளர்ப்பு நாய்களையும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தினர்.
வரத்து அதிகரித்தது
தற்போது விவசாயிகள் அதிகமாக தக்காளி சாகுபடி செய்வதால் கோலார், சிக்பள்ளாப்பூர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்தது.
அதனால் 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி விலை ரூ.100-க்கு கூட விற்பனை ஆவதில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
இரண்டாம் ரக தக்காளியை வாங்க யாரும் முன்வருவதில்லை. இதனால் விவசாயிகள் அவற்றை கீழே கொட்டிவிட்டு செல்கின்றனர். நகரப்பகுதிகளில் ரூ.100-க்கு 10 கிலோ முதல் 12 கிலோ என்ற அடிப்படையில் வாகனங்களில் வியாபாரிகள் தக்காளியை மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். அந்த அளவுக்கு தக்காளியின் விலை குறைந்துள்ளது.
மாதுளை பழங்கள் சாகுபடி
தற்போது சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் மாதுளை பழம் சாகுபடி அதிகரித்துள்ளது. இருப்பினும் மாதுளை பழத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஒரு கிலோ மாதுளை ரூ.150 முதல் ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் அவற்றின் தேவை அறிந்து விவசாயிகள் மாதுளை பழத்தை அதிகமாக தோட்டங்களில் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் மாதுளை பழங்களின் சாகுபடி அதிகரித்துள்ளது.
விலை அதிகரித்துள்ளதால் தோட்டங்களில் இருந்து மாதுளை பழங்களை திருடிச் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தக்காளியை போல் மாதுளை பழங்களின் விலையும் அதிகரித்து இருப்பதால், அவற்றை மர்ம நபர்கள் திருடக்கூடும் என்று விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனால் மாதுளை பழங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.