புதிய திட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது - ஸ்வப்னா சுரேஷ் பேட்டி

இந்த ஊழலின் பின்னணியில் முதல்-மந்திரியின் ஒட்டுமொத்த குடும்பமும் உள்ளது.

Update: 2023-02-15 13:08 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. பினராயி விஜயனின் அரசில் முன்னாள் தலைமை செயலாளராக இருந்தவர் எம். சிவசங்கர். ஐக்கிய அமீரகத்தின் தூதரகத்துக்கு வந்த பார்சல்களில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இவருடன் சரித்குமார், சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், லைப் மிஷன் திட்ட ஊழல் தொடர்பாக, முதலமைச்சரின் முன்னாள் செயலாளர் சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

கேரள அரசின் லைப் மிஷன் திட்டத்தின் கீழ், திரிசூர் மாவட்டத்தில் 140 பேருக்கு வீடு கட்ட திட்டமிட்டது. இதில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ஸ்வப்னா சுரேஷ் கூறியிருந்த நிலையில், தற்போது, 3 கோடியே 80 லட்சம் ரூபாய் அவருக்கு லஞ்சம் கொடுத்ததாக ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார். முன்னாள் செயலாளர் சிவசங்கர் மூலம் ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டதாக கூறியுள்ளதால், அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. லைப் மிஷன் ஊழல் வழக்கில், இது முதல் கைது நடவடிக்கை ஆகும்.

சிவசங்கர் கைது நடவடிக்கை குறித்து சுவப்னா சுரேஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

இந்த ஊழலின் பின்னணியில் முதல்-மந்திரியின் ஒட்டுமொத்த குடும்பமும் உள்ளது. உண்மையை மக்கள் முன் கொண்டு வர வேண்டும். புதிய திட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்

சிவசங்கர் அவர்கள் அனைத்து நிர்வாகத் தேவைகளையும் பூர்த்தி செய்ய உதவி உள்ளார். இதனால் அவர்கள் மோசடியில் ஈடுபட்ட வாய்ப்பு உள்ளது. அமலாக்கத்துறை சரியான பாதையில் செல்கிறது. அவர்களுடன் ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன். முதல்-மந்திரியின் சட்டவிரோதப் பணியை நிர்வகிப்பது குறித்து தீவிரமாக விசாரிக்கவும், அவரிடம் பணிபுரியும் மற்றவர்களை விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறையை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்