எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் நிலை வராது
சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைப்பது உறுதி என்பதால், எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் நிலை வராது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு:-
பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கூட்டணி அமைக்கும் நிலை...
சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்பு வெளியான கருத்து கணிப்பு முடிவுகளுக்கும், அரசியல் சூழ்நிலைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஏனெனில் பா.ஜனதா ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள நிலை குறித்து, வாக்காளர்களின் மனநிலை பற்றியும் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளது. அதன்படி, இந்த தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை
பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. எங்களது கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் சொந்த பலத்திலேயே ஆட்சி அமைப்போம். பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் நிலை வராது.
காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை
தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க போவதில்லை. அதனால் தான் அந்த கட்சியின் தலைவர்கள் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாகவே வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீதே, அந்த கட்சியின் தலைவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்துவதற்கு உரிமை உள்ளது. அதன்படி, தலைவர்கள் ஆலோசிக்கிறார்கள். இது வழக்கமானது தான். எல்லா கட்சிகளின் தலைவர்களும் கூடி ஆலோசனை நடத்துவது சகஜமானது.
இவ்வாறு அவர் கூறினார்.