2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு ஆஸ்திரேலியாவில் நடப்பதில் சிக்கல்.!

2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் நேற்று விலகியது.

Update: 2023-07-18 22:58 GMT

மெல்போர்ன்,

காமன்வெல்த் விளையாட்டு

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946-ம் ஆண்டுகளில் மட்டும் இந்த போட்டி ரத்தானது. மற்றபடி தங்குதடையின்றி நடந்து வருகிறது.

கடைசியாக 2022-ம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி அரங்கேறியது. இதில் 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

அடுத்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள 5 நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் 20 வகையான விளையாட்டுகளும், 9 வகையான பாரா போட்டிகளும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

விக்டோரியா மாகாணம் திடீர் விலகல்

இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலகுவதாக விக்டோரியா மாகாண அரசு நேற்று தடாலடியாக அறிவித்தது. போட்டியை நடத்த தாங்கள் மதிப்பிட்ட பட்ஜெட்டை விட தற்போது அதிக தொகை பிடிக்கும் என்று தெரியவந்து இருப்பதால் இந்த கடினமான முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விக்டோரியா மாகாண பிரதமர் டேனியல் ஆன்ட்ரூஸ் கூறுகையில், 'அடுத்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்துவதற்கு எனது அரசு கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டது. அதற்காக எந்த விலை கொடுத்தாவது அதனை நடத்துவோம் என்று அர்த்தம் கிடையாது. 5 பிராந்திய நகரங்களில் இந்த போட்டியை நடத்த 2.6 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (இந்திய மதிப்பில் ரூ.14 ஆயிரத்து 500 கோடி) தேவைப்படும் என்று முதலில் கணக்கிடப்பட்டது. ஆனால் தற்போது இதற்கான தொகை 7 பில்லியன் ஆஸ்திரேலிய டாலராக (ஏறக்குறைய ரூ.39 ஆயிரம் கோடி) அதிகரிக்கும் என்று தெரியவருகிறது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் 12 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிக்காக நாங்கள் 7 பில்லியன் டாலரை செலவழிக்கும் நிலையில் இல்லை. இந்த தொகையை நாங்கள் செலவழித்தாலும் அதனால் எங்களுக்கு பெரிய அளவில் ஆதாயம் எதுவும் கிடைக்காது. இதனால் இந்த போட்டியை நடத்துவதில் இருந்து விலகும் முடிவை எடுத்தோம். இது குறித்து காமன்வெல்த் விளையாட்டு அமைப்புடன் சுமுகமாக விவாதித்தோம். எங்கள் முடிவை தெரிவிக்கும் முன்பு போட்டியை மெல்போர்னுக்கு மாற்றலாமா? என்பது உள்பட எல்லா அம்சங்களையும் பரிசீலனை செய்தோம்' என்றார்.

விக்டோரியா அரசின் திடீர் அறிவிப்பால் 2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு திட்டமிடப்படி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சம்மேளனம் அதிருப்தி

போட்டியை நடத்துவதில் இருந்து விலகி இருக்கும் விக்டோரியா மாகாண அரசின் முடிவால் காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்து இருக்கிறது. இது தொடர்பாக அந்த சம்மேளனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'விக்டோரியா மாகாண அரசின் விலகல் முடிவு கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த முடிவை அரசு எடுப்பதற்கு முன்னதாக சூழ்நிலை குறித்து எங்களுடன் விவாதித்து கூட்டாக சுமுக தீர்வு காண வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை. நமது வீரர்களின் நலன் கருதி இந்த போட்டி பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்