குடோனில் ரூ.2 லட்சம் பாக்கு மூட்டைகள் திருட்டு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

சிவமொக்கா அருகே குடோனில் ரூ.2 லட்சம் பாக்கு மூட்டைகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-06-27 15:33 GMT

சிவமொக்கா;

சிவமொக்கா தாலுகா கேத்தினபொப்பா கிராமத்தை சேர்ந்தவர் சந்திரப்பா. விவசாயியான இவருக்கு சொந்தமாக 4 ஏக்கரில் பாக்குத்தோட்டம் உள்ளது. இந்த நிலையில் சந்திரப்பா, மரங்களில் இருந்து பாக்குகளை பறித்து காயவைத்து மூட்டைகளில் கட்டி அதனை தனது வீட்டின் பின்புறம் உள்ள குடோனில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மா்மநபர்கள் சிலர், சந்திரப்பா வீட்டின் பின்புறம் உள்ள குடோனின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் மர்மநபர்கள், குடோனில் இருந்த பாக்குகளை மூட்டைகளுடன் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதற்கிடையே சந்திரப்பா, குடோனின் ஜன்னல் உடைந்து கிடப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது மர்மநபர்கள், 600 கிலோ பாக்கு மூட்டைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும். இதுகுறித்து சந்திரப்பா, சிவமொக்கா புறநகர் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்