பெங்களூருவில் வெள்ளத்தால் வீடுகளில் தேங்கிய சகதியை அகற்றும் பணி தொடங்கியது

பெங்களூருவில் வெள்ளத்தால் வீடுகளில் தேங்கிய சகதியை அகற்றும் பணி தொடங்கியது

Update: 2022-09-10 21:05 GMT

பெங்களூரு: பெங்களூருவில் வெள்ளத்தால் வீடுகளில் தேங்கிய சகதியை அகற்றும் பணி தொடங்கி உள்ளது. ஆர்.ஆர்.நகரில் மண்சரிவு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

வீடுகளுக்கு திரும்பும் மக்கள்

பெங்களூரு சர்ஜாபுரா ரோடு, பெல்லந்தூர், மாரத்தஹள்ளி, எமலூர், காடுகோடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் உடைந்து அடுக்குமாடி குடியிருப்புகள், விலை உயர்ந்த சொகுசு பங்களாக்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. வெள்ளத்தில் விலை உயர்ந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் மூழ்கின. மக்களின் அத்தியாவசிய பொருட்கள் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கிய மக்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து குடியிருப்புகள், பங்களாக்களில் வசித்து வந்தவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். சிலர் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களாக்களில் தேங்கிய வெள்ளத்தை மின்மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையே உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தவர்கள் மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்பி வர ஆரம்பித்து உள்ளனர்.

3 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

மேலும் வெள்ளத்தில் சிக்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் வீடுகளையும் சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், மழை பாதிப்பு குறித்து மாநகராட்சி சார்பில் ஆய்வு செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வாய்ப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அந்த 3 ஆயிரம் வீடுகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.3 கோடியை விடுவிக்க மாநகராட்சி தீர்மானித்துள்ளது. அதே நேரத்தில் மழை பாதித்த பகுதிகளில் தண்ணீர் வடிந்தாலும், அங்கு தொற்று நோய் பரவ பாதிப்பு உள்ளதால், முன் எச்சரிக்கயைாக மருந்துகள் வினியோகம் செய்யும் பணிகளிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் 10 நவீன எந்திரங்கள் உதவியுடன் பெங்களூருவில் வீடுகளில் புகுந்த கழிவு நீர் வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவு

இந்த நிலையில் ஆர்.ஆர்.நகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கிரிதாமா லே-அவுட்டில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட போது 20 டன் எடை கொண்ட ராட்சத பாறை ஒன்று மலை முகட்டில் இருந்து உருண்டு வந்தது. ஆனால் பாறையில் ஒரு பாதி மட்டும் தான் உடைந்து கீழே விழுந்தது.

இன்னொரு பாதி பாறை அப்படியே நிற்கிறது. அந்த பாறை எந்த நேரத்திலும் உருண்டு விழும் அபாயம் உள்ளது. இதனால் அங்கு வசித்து வரும் மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் வரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடம் தொல்லியல் துறைக்கு சொந்தமானது என்று கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்