செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் ஏற்படுத்தும் சமூக பாதிப்பு; எச்சரிக்கை வீடியோ

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உதவியால் ஏற்பட கூடிய சமூக பாதிப்பு பற்றி வீடியோ ஒன்று எச்சரிக்கை தெரிவிக்கின்றது.

Update: 2023-01-22 05:33 GMT



புதுடெல்லி,


சமூகத்தில் செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஊடகங்களின் பணி அளவிட முடியாதது. எனினும், அவற்றின் உண்மை தன்மை பற்றி ஆராய்வதும் அவசியத்திற்கு உள்ளான ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலி வீடியோவால் ஏற்பட கூடிய சமூக ஆபத்துகளை பற்றி எச்சரிக்கும் வகையில், தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது டுவிட்டர் வலைதளத்தில் புது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

56 வினாடிகள் ஓட கூடிய அந்த வீடியோவில், ஒரு நபர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவியுடன் அவர் உருவாக்கிய வீடியோவை ஓட செய்கிறார். அதில், இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவில் அவர் பேசி கொண்டிருக்கிறார்.

ஆனால், அவரின் அசைவுகள், செய்கைகள் போன்றே அதே வீடியோவின் மற்றொரு பகுதியில் இன்னொரு நபர் தோன்றுகிறார். அந்த நபர், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர், ஷாருக் கான் ஆகியோரை போன்ற முக அமைப்புகளை கொண்டு, அடுத்தடுத்து மாறி கொண்டிருக்கிறது.

இதனால், பல்வேறு நபர்களின் முக அமைப்புகளை மார்பிங் செய்து, போலி வீடியோவை தயாரித்து சமூகத்தில் பரவ விட முடியும் என்று எச்சரிக்கை தரும் வகையில் வீடியோ அமைந்து உள்ளது.

இதுபற்றி ஆனந்த் மகிந்திரா கூறும்போது, பரவி வர கூடிய இந்த வீடியோவானது சரியான தருணத்தில் எச்சரிக்கை மணியை அடித்து உள்ளது. ஒருபுறம் நம்மை மகிழ்விக்க கூடிய வகையில் இந்த வீடியோ அமைந்தபோதிலும், ஏமாற்ற கூடிய விசயங்களை வழங்குவதில் இருந்து, நாம் இந்த சமூகத்தில் நம்மை பாதுகாத்து கொள்ள எப்படி தயாராக இருக்கிறோம்? என்பதும் கவனத்தில் கொள்வதற்குரிய விசயம் ஆகும்.

இவற்றில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ளும் வகையில், முன்னேற்பாடான விசயங்கள் எதுவும் உண்டா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த தொழில் நுட்பம் உதவியால் பல துறை பிரபலங்களின் முக அமைப்புகளை போன்று மார்பிங் செய்து, அவர்கள் கூறுவது போன்ற விசயங்களை பரவ செய்ய கூடிய ஆபத்து சுட்டி காட்டப்பட்டு உள்ளது.

இதனை 2.5 லட்சம் பேர் வரை பார்வையிட்டு உள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் விமர்சனங்களையும் வெளியிட்டு உள்ளனர்.

இதுபோன்ற தொழில் நுட்பங்களால் வருங்காலத்தில் போலி செய்திகளை எளிதில் பரப்புவதும், மலிவான நோக்கங்களுக்கு உபயோகப்படுத்தி கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. இதனால், பலரது வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழலும் காணப்படுகிறது என்பன போன்ற விமர்சனங்களை பலர் வெளியிட்டு உள்ளனர்.

சமூகம் பற்றி புரிந்து கொண்டு, ஒரு பாதாள குழியில் விழுந்து விடாமல் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்.

இந்த வீடியோவானது தரமுடன் உருவாக்கப்படவில்லை. ஒருவேளை அதிக திறன் படைத்த கணினிகள் மற்றும் இன்னும் கூடுதலான முயற்சிகள் எடுத்து, இதுபோன்ற போலி வீடியோக்களை வெளியிடும்போது, அவை உண்மை போன்று, இன்னும் கூடுதலான தாக்கம் ஏற்படுத்தும் பாதிப்பும் உள்ளது என இந்திய வன துறை அதிகாரியான பர்வீன் கஸ்வானும் விமர்சனம் வெளியிட்டு உள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்