இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை, தேவையற்ற பீதி வேண்டாம்: மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Update: 2022-06-04 09:20 GMT

காசியாபாத்,

'மங்கிபாக்ஸ்' என்று அழைக்கப்படும் 'குரங்கு அம்மை', இப்போது உலகம் சந்திக்கக்கூடிய முக்கியமான சவால்களுள் ஒன்றாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 20 நாடுகளுக்கு மேலாக பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தி கைவரிசையைக் காட்டிவிட்டது. காய்ச்சல், உடல் வலி, தலை வலி போன்றவை முதல் அறிகுறிகளாகவும், தொடர்ந்து 3 நாட்களுக்குள் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகளும், பின்பு கொப்புளங்களாக மாறும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதனால் உயிர் பாதிப்பு இல்லையென்றாலும், இதனால் உடல்நிலை பெரிதும் சீர்கெடும். 'குரங்கு அம்மை' நோய் வராமல் தடுக்க பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை போடலாமா? என்பது குறித்து அமெரிக்கா, ஜெர்மனி, கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுவரை இந்தியாவில் இந்த குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படாவிட்டாலும், உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி சரும அரிப்பு, கொப்புளங்கள், தோல் தடுப்பு ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பியுள்ள அதிகாரிகள், குழந்தையை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். சிறுமியோ அவரது உறவினர்களோ கடந்த 1 மாதத்தில் வெளிநாடு பயணம் மேற்கொள்ளாத நிலையில், குரங்கு அம்மை அறிகுறி ஏற்பட்டுள்ளதால் சிறுமி வசித்த பகுதியில் ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. காசியாபாத்தை சேர்ந்த சிறுமிக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவரது மாதிரிகள் காசியாபாத்தில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்