பெங்களூரு-மைசூரு விரைவு சாலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்
பிரதமர் மோடி வருகிற 12-ந் தேதி திறக்க உள்ள நிலையில் பெங்களூரு-மைசூரு விரைவு சாலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பெங்களூரு:-
பெங்களூருவையும், மைசூருவையும் இணைக்கும் விதமாக மத்திய சாலை போக்குவரத்து கழகம் சார்பில் விரைவு சாலை அமைக்கப்பட்டது. அந்த பணிகள் நிறைவடைந்து உள்ள நிலையில் விரைவு சாலையின் ஒரு பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் உள்ள சுங்கச்சாவடியில் வருகிற 14-ந் தேதி முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. வருகிற 12-ந் தேதி பிரதமர் மோடி தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய திட்டங்களில் ஒன்றான பெங்களூரு-மைசூரு விரைவு சாலையை தொடங்கி வைக்க உள்ளார். இதனால் நெடுஞ்சாலை பகுதிகளில் முடிக்கப்படாமல் உள்ள பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கர்நாடகத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலையான பெங்களூரு-மைசூரு விரைவு சாலை விரைவில் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
நெடுஞ்சாலையின் அருகே உள்ள கிராம மக்கள், தங்களுக்கு சுரங்க சாலை அமைத்து தர கோரிக்கை வைத்து இருந்தனர். அதன்படி நெடுஞ்சாலையில் இந்துவலு, புடனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுரங்க சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சர்வீஸ் சாலைகள் அருகே சிக்னல்கள் அமைப்பது, மின்விளக்குகள் பொருத்தும் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அந்த பணிகள் பிரதமர் மோடி வருகைக்கு முன்பு முடிக்கப்படும்' என்றார்.