கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய சங்கத்தினர் போராட்டம்

மைசூருவில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள், போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-14 21:17 GMT

மைசூரு:-

விவசாய சங்கங்கள்

மைசூரு மாவட்டத்தில் மாநில விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மாநில கரும்பு விவசாயிகளின் சங்கம் சார்பில், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் தலைமையில் விவசாயிகள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர்.

அவர்கள் மைசூரு லலித் மஹால் பேலஸ் மைதானத்தில் இருந்து பன்னூர்சாலை வழியாக சித்தார்த்தா நகரில் இருக்கும் புதிய கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்

அதில் கரும்புக்கான நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் எனவும், விவசாயத்திற்கு நிரந்தரமாக மின்சாரம் வழங்க வேண்டும் எனவும், கரும்புக்கு எப்.ஆர்.பி. கட்டண ஆதாரத்தின் மீது தொழிற்சாலைகள் பணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர். அப்போது விவசாயிகள் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தள்ளுமுள்ளு

அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட பொறுப்பு மந்திரி வரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். மேலும் தொழிற்சாலை நிர்வாக அதிகாரிகளிடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதி அளித்தார். இதனால் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்