எத்தினஒலே திட்டம் இந்த ஆண்டே நிறைவேற்றப்படும்; சாதனை விளக்க மாநாட்டில் பசவராஜ் பொம்மை பேச்சு

கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி என்றும், எத்தினஒலே திட்டம் இந்த ஆண்டே நிறைவேற்றப்படும் என்றும் தொட்டபள்ளாப்புராவில் நடந்த சாதனை விளக்க மாநாட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-10 17:17 GMT

பெங்களூரு:

சாதனை விளக்க மாநாடு

கர்நாடகத்தில் முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை கடந்த ஆண்டு (2021) முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று ஒரு ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, பா.ஜனதா அரசின் சாதனை விளக்க மாநாடு தொட்டபள்ளாப்புராவில் ரகுநாதபுராவில் நடந்தது.

இதில் பெங்களூரு, கோலார், பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்திருந்தார்கள். இந்த மாநாட்டில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்வதாக இருந்தது. அவர் கலந்துகொள்ள முடியாததால் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்துகொண்டார்.

இந்த மாநாட்டுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமை தாங்கினார். முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, சதானந்தகவுடா, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மந்திரிகள் சுதாகர், எம்.டி.பி.நாகராஜ், முனிரத்னா உள்பட ஏராளமான தலைவர்கள் பங்கேற்றனர். மாநாடு கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

எத்தினஒலே திட்டம்

கர்நாடகத்தில் எடியூரப்பா, எனது தலைமையிலான அரசு அமைந்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்து இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநிலத்தில் கூட்டணி ஆட்சி இருந்தபோது கொரோனா பரவலை சரியாக நிர்வகிக்கவில்லை. எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு அமைந்த பின்பு தான் கொரோனா கட்டுக்குள் வந்தது.

காங்கிரஸ் கட்சியினருக்கு எத்தினஒலே திட்டம் என்றால் என்ன? என்பது பற்றியே தெரியவில்லை. சிக்பள்ளாப்பூர், கோலார் மாவட்ட மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் விதமாக எத்தினஒலே திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த திட்டம் முடிக்கப்பட்டு இந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் சந்தர்ப்பத்தில், திட்டம் தங்களுடையது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த ஆண்டே நிறைவேற்றப்படும்

இந்த திட்டம் பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. முதல்-மந்திரியாக எடியூரப்பா இருந்த போது எத்தினஒலே திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கு தேவையான நிதியை பா.ஜனதா அரசு ஒதுக்கியது. இந்த திட்டத்திற்கு தேவையான ரூ.3 ஆயிரம் கோடியை உடனடியாக ஒதுக்கி, இந்த ஆண்டே எத்தினஒலே திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

இது இரட்டை என்ஜின் அரசாகும். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசு உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். கர்நாடக அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவரது தலைமையிலான ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்திருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை அம்பலப்படுத்துவோம். கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைப்பது உறுதி. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்