கோழிக்கறி குழம்பு வைக்காததால் 2-வது மனைவியை கொன்ற டிரைவர்

ஹரிஹரா தாலுகாவில் கோழிக்கறி குழம்பு வைத்து தராததால் 2-வது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த ரோடு ரோலர் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Update: 2022-06-11 22:20 GMT

சிக்கமகளூரு: ஹரிஹரா தாலுகாவில் கோழிக்கறி குழம்பு வைத்து தராததால் 2-வது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த ரோடு ரோலர் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

ரோடு ரோலர் டிரைவர்

தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகா பன்னிகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் கெஞ்சப்பா(வயது 35). இவர் ரோடு ரோலர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு கெஞ்சப்பா பிரிந்தார்.

பின்னர் அவர் வாசனா என்ற கிராமத்தில் தங்கி இருந்து ரோடு ரோலர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் கெஞ்சப்பாவுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஷீலா(31) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

2-வது திருமணம்

கெஞ்சப்பா தனக்கு திருமணமாகி முதல் மனைவி இருப்பதை மறைத்து, ஷீலாவை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ஷீலாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஷீலா வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் கெஞ்சப்பாவும், ஷீலாவும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் வாசனா கிராமத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

இதையடுத்து ஷீலா கர்ப்பம் அடைந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கெஞ்சப்பா தனது மகள், மனைவியுடன் வசித்து வந்தார். இந்த சந்தர்ப்பத்தில் கெஞ்சப்பாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உயிருடன் இருப்பதும், குழந்தை இல்லாத காரணத்தால் அதை மறைத்து தன்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டதும் ஷீலாவுக்கு தெரியவந்தது.

கோழிக்கறி குழம்பு

இருப்பினும் அவர் தனது கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஷீலாவின் நடத்தையில் கெஞ்சப்பா சந்தேகம் அடைந்தார். இதையடுத்து அவர் அடிக்கடி, ஷீலாவிடம் தகராறு செய்து வந்தார். மேலும் அவரது நடத்தையை விமர்சித்து அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்த கெஞ்சப்பா, கோழிக்கறி குழம்பு வைத்து தரும்படி ஷீலாவிடம் கூறிவிட்டு வெளியே சென்றார்.

பின்னர் அவர் வீடு திரும்பியபோது கோழிக்கறி குழம்பு வைக்காமல் இருந்தது தெரியவந்தது. இதில் ஆத்திரம் அடைந்த கெஞ்சப்பா மீண்டும், ஷீலாவிடம் தகராறு செய்து அவரை அடித்து, உதைத்தார். மேலும் ஷீலாவின் நடத்தையையும் விமர்சித்து தகாத வார்த்தைகளால் திட்டினார்.

கைது

ஆத்திரம் அடங்காத அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஷீலாவை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த ஷீலா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி ஹரிஹரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கெஞ்சப்பாவையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷீலாவை கொன்றுவிட்டு, கெஞ்சப்பா சிறைக்கு சென்றுவிட்டதால் அவர்களது பெண் குழந்தை ஆதரவற்ற நிலையில் உள்ளது. அந்த குழந்தையை கெஞ்சப்பாவின் முதல் மனைவியிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்