நாங்கள் வணங்கும் தெய்வம்தான் என் தம்பியை காப்பாற்றி இருக்கிறது; ஆட்டோ டிரைவர் புருஷோத்தமின் அண்ணன் உருக்கம்
நாங்கள் வணங்கும் தெய்வம்தான் என் தம்பியை காப்பாற்றி இருக்கிறது என்று குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த ஆட்டோவை ஓட்டிய டிரைவர் புருஷோத்தமின் அண்ணன் கூறினார்.
பெங்களூரு:
குண்டுவெடிப்பு
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் மற்றும் ஆட்டோவில் பயணித்து வந்த பயணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது ஷாரிக் என்ற பயங்கரவாதி என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஷாரிக்கை கைது செய்தனர். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தமின் அண்ணன் நாகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிராம தேவதைகள்...
நாங்கள் கடவுள்களுக்கு அலங்காரம் செய்ய பயன்படுத்தப்படும் சந்தனத்தை தயாரித்து வழங்கும் குடும்பம் எங்களுடையது. அதுதான் எங்களுடைய முக்கிய பணி. இந்த விஷயத்தில் என் தம்பியையும், பேரழிவையும் நாங்கள் வணங்கும் கிராம தேவதைகள்தான் காப்பாற்றி இருக்கிறார்கள்.
புருஷோத்தம் ஒரு இதய நோயாளி. அதனால் அவர் அதிகப்படியான வேலைகள் செய்யவில்லை. இருப்பினும் என் தம்பிக்கு இந்த நிலை ஏற்பட்டதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதய அறுவை சிகிச்சை
ஆஸ்பத்திரிக்குள் என் தம்பியை பார்க்க குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்குகிறார்கள். போலீஸ் விசாரணை முடியும் வரை ஆட்டோவும் எங்களுக்கு திரும்ப கிடைக்காது. அது மிகவும் கஷ்டம். புருஷோத்தமிற்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களாகத்தான் அவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
எங்கள் குடும்ப கோவிலில் பூஜை செய்யும் பணிகளை அவர் செய்தார். நானும், என் தம்பியும் கோவிலில் வேலை செய்யும் வேலைக்காரர்கள்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.