வீரசாவர்க்கர் பேனர் அகற்றப்பட்டதால் பதற்றம்: சிவமொக்காவில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

வீரசாவர்க்கர் பேனரை அகற்றியதால் ஏற்பட்ட பதற்றத்தால் சிவமொக்காவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. பத்ராவதியில் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-19 14:45 GMT

சிவமொக்கா;

வீரசாவர்க்கர் உருவப்படம்

கர்நாடகம் முழுவதும் கடந்த 15-ந் தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதுபோல் சிவமொக்காவிலும் சுதந்திர தின விழா கோலாகலமாக நடந்தது. இந்த நிலையில் சிவமொக்கா டவுன் பி.எச்.சாலை அமீர் அகமது சதுக்கத்தில் சுதந்திர தின விழாவையொட்டி பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் சில பேனர்களில் வீரசாவர்க்கரின் உருவப்படம் அச்சிடப்பட்டு இருந்தது.

இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் வீரசாவர்க்கரின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனரை அகற்றிவிட்டு திப்பு சுல்தானின் உருவப்படம் அடங்கிய பேனரை வைத்து சுதந்திர தின விழாவை கொண்டாட முயன்றனர்.

பரபரப்பு, பதற்றம்

இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. மேலும் இருதரப்பினர் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பினர் மீதும் தடியடி நடத்தி அடித்து விரட்டினர்.

இதனால் இருதரப்பினரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதற்கிடையே இச்சம்பவம் நடந்த அன்று இரவு இந்து பிரமுகர் பிரேம் சிங் கத்தியால் குத்தப்பட்டார். இதனால் மேலும் பதற்றம் அதிகரித்தது.

இதையடுத்து சிவமொக்காவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற கடைகள் திறக்கப்படவில்லை. மேலும் போலீசாரும் குவிக்கப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

144 தடை உத்தரவு

இதேபோல் பத்ராவதியிலும் மோதல் சம்பவம் ஏற்பட்டதால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர். 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையுடன் 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்தது.

ஆனால் 144 தடை உத்தரவை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து கிழக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. தியாகராஜன் உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பாக சிவமொக்காவில் போலீஸ் ஐ.ஜி. தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிவமொக்காவில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடை உத்தரவு 20-ந் தேதி(இன்று) நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பத்ராவதியில் சகஜ நிலை திரும்பி இருக்கிறது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படாமல் விலக்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

இரவு 9 மணி வரை...

இருந்தாலும் அங்கு காலையும், மாலையும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். கடைகளை இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கூடுதல் பாதுகாப்பிற்காக வந்த போலீசார் பத்ராவதியிலேயே முகாமிட்டு இருப்பார்கள். முழுமையான சகஜ நிலை திரும்பிய பிறகு கூடுதல் போலீசார் திரும்பிச் செல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்