நேத்ராவதி ஆற்றில் படகு கவிழ்ந்து வாலிபர் மாயம்; 2 பேர் நீந்தி கரைக்கு வந்தனர்
நேத்ராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ள சென்றபோது படகு கவிழ்ந்து வாலிபர் மாயமானார். அவரது கதி என்ன என்பது தெரியவில்லை. அவருடன் சென்ற 2 பேர் நீந்தி கரைக்கு வந்தனர்.
மங்களூரு;
படகு ஆற்றில் கவிழ்ந்தது
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே நேத்ராவதி ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் 3 பேர் அடையார் பகுதியில் நேத்ராவதி ஆற்றில் மணல் அள்ள ஒரு படகில் சென்றுள்ளனர்.
அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததாக தெரிகிறது. இதனால் எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதன்காரணமாக அவர்கள் 3 பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
மாயம்
அவர்களில் 2 பேர் நீச்சல் அடித்து கரைக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் மற்றொருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமானார். அவருடைய கதி என்ன என்பது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற 2 பேரும், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.
பின்னர் தீயணைப்பு படையினர் ஆற்றில் மாயமானவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அவர் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மாயமானவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஜா ஷா என்பதும், நீந்தி கரைக்கு வந்தவர்கள் மோட்டு ஷா, நாகேந்திர குமார் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.