சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் வாலிபருக்கு 22 ஆண்டு சிறை
சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் வாலிபருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மண்டியா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
மண்டியா-
சிறுமி பலாத்காரம்
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 25). இவரது வீட்டின் அருகே சிறுமி ஒருவள் தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது சிறுமி வீட்டில் இருந்து படித்து வந்தாள்.
இந்த நிலையில் அவளது ெபற்றோர் வேலைக்கு சென்ற சமயத்தில், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ரவி, வீட்டுக்குள் புகுந்து அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்த சிறுமி இதுபற்றி வெளியே கூறவில்லை.
இதுபற்றி அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த மகேஷ் என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் தனது ஆசைக்கு இணங்கும்படியும் சிறுமியை மகேஷ் வற்புறுத்தி உள்ளார்.
22 ஆண்டு சிறை
இதற்கிடையே சிறுமி கர்ப்பமானாள். இதனை அறிந்து அவளது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கதறி அழுதாள். இதுகுறித்து அவர்கள், மலவள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவி மற்றும் மகேசை கைது செய்தனர். மேலும் அவா்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று நீதிபதி நாகஜோதி தீர்ப்பு வழங்கினார். அப்போது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ரவிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகேசுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.19 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.