ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பிரசவம்: குழந்தைக்கு ரெயிலின் பெயரை சூட்டி நெகிழ்ச்சி
தீவிரத்தை உணர்ந்த ரெயில் பயணிகள், அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்தனர்.
போபால்,
மும்பையில் இருந்து வாரணாசிக்கு 'காமயானி' எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் 24 வயதான நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தன் கணவருடன் நாசிக் நிறுத்தத்தில் ஏறினார்.
மத்தியபிரதேசம் தலைநகர் போபால் அருகே அந்த ரெயில் சென்று கொண்டிருந்தபோது இளம்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் அலறினார். தீவிரத்தை உணர்ந்த ரெயில் பயணிகள் அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்தனர்.
அதன்படி ஓடும் ரெயிலுக்குள்ளேயே அந்த இளம்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே அபாய சங்கிலியை இழுத்து ரெயில் நிறுத்தப்பட்டது.
சம்பவம் அறிந்த ரெயில்வே போலீசார் குழந்தையுடன் இளம்பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்தநிலையில் ஓடும் ரெயிலில் பிறந்த தங்கள் குழந்தைக்கு ரெயிலின் பெயரான 'காமயானி'யை அதன் பெற்றோர் சூட்டினர்.