தன்வீர் சேட், தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி ஆதரவாளர்கள் தற்கொலைக்கு முயற்சி

அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த நிலையில் தன்வீர்சேட்டை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-02-28 18:45 GMT

பெங்களூரு:

அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த நிலையில் தன்வீர்சேட்டை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தன்வீர் சேட் எம்.எல்.ஏ.

கர்நாடக காங்கிரசில் மூத்த தலைவராக இருந்து வருபவர் தன்வீர் சேட்(வயது 56). இவர் கடந்த முறை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாகவும் இருந்தார். மைசூருவை சேர்ந்த இவர், மைசூரு டவுனில் உள்ள நரசிம்மராஜா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு முதல் தன்வீர் சேட் நரசிம்மராஜா தொகுதியை தன் வசம் வைத்துள்ளார். தொடர்ந்து 5 முறை அவர் அந்த தொகுதியில் வெற்றிபெற்று இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதி மைசூருவில் நடந்த ஒரு திருமணத்தில் தன்வீர் சேட் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது அவரை பர்ஹான் பாஷா என்ற 25 வயது வாலிபர் கத்தியால் குத்தினார். அதில் கழுத்து பகுதியில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த தன்வீர் சேட் எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.

கர்நாடக சட்டசபை தேர்தல்

இந்த நிலையில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கர்நாடக சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஏராளமானோர் காய் நகர்த்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் கர்நாடக காங்கிரஸ் மற்றும் கட்சி மேலிட தலைவர்களையும் சந்தித்து தங்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்குமாறு கேட்டு வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் தன்வீர்சேட் போட்டியிடப் போவதில்லை என்றும், இதுபற்றி அவர் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்து விட்டதாகவும், மேலும் இதுதொடர்பாக கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு கடந்த டிசம்பர் மாதமே அவர் கடிதம் எழுதி இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அந்த கடிதத்தில் உடல் நலனை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், தான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தன்வீர்சேட் குறிப்பிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

2 பேர் தற்கொலைக்கு முயற்சி

இதனால் நேற்று மைசூரு டவுன் உதயகிரி லே-அவுட் எம்.ஜி. ரோட்டில் உள்ள தன்வீர் சேட் எம்.எல்.ஏ.வின் வீட்டுக்கு அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் வந்தனர். அவர்கள் எதிர்வரும் தேர்தலில் கண்டிப்பாக நீங்கள்(தன்வீர்சேட்) போட்டியிட வேண்டும் என்றும் கூறி கோஷமிட்டனர். ஆதரவாளர்கள் வந்திருப்பது குறித்து அறிந்த தன்வீர்சேட் உடனடியாக அங்கு வந்தார். அவர் தனது ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்களில் 2 பேர் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

அதாவது ஒருவர் தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டார். மேலும் அவர், தன்வீர் சேட் தேர்தலில் போட்டியிட சம்மதம் தெரிவிக்க வேண்டும், இல்லையேல் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டினார்.

பரபரப்பு

அதேபோல் இன்னொருவரும் தன்வீர்சேட்டின் வீட்டின் மாடியில் ஏறி அங்குள்ள மேற்கூரையில் நின்று கொண்டார். தேர்தலில் போட்டியிட தன்வீர்சேட் சம்மதம் தெரிவிக்காவிட்டால் உடனடியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரையும் சக ஆதரவாளர்கள் மீட்டனர்.

அதையடுத்து ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய தன்வீர்சேட் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் தனது முடிவை அறிவிப்பேன் என்றும், அது நல்ல முடிவாக இருக்கும் என்றும் கூறினார். அதை ஏற்றுக் கொண்ட ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்