தமிழர்கள், அரசியல், எல்லை தாக்குதல்...! என கமல்ஹாசன்- ராகுல்காந்தி நீண்ட உரையாடல்

டெல்லியில் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்து உரையாடினார். தற்போது கமல்ஹாசனுடன் கலந்துரையாடிய வீடியோவை ராகுல்காந்தி யூடியுப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

Update: 2023-01-02 09:53 GMT

புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் ராகுல்காந்தி அழைப்பை ஏற்று, கடந்த டிசச்ம்பர் 24ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

இதை வைத்து நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் என்று பலவிதமான யூகங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

டெல்லியில் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்து உரையாடினார். தற்போது கமல்ஹாசனுடன் கலந்துரையாடிய வீடியோவை ராகுல்காந்தி யூடியுப் சேனலில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ராகுல் காந்தி: கமல், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. எனது நடைப்பயணத்தில் கலந்துகொண்டதற்கு நன்றி.

கமல்ஹாசன்: நன்றி எனக் கூறாதீர்கள். ஒரு இந்தியனாக நாட்டில் நடப்பவற்றை பார்த்து எனக்குள் எழும் கோபத்தை வெளிப்படுத்த வேண்டியது எனது கடமை என தோன்றியது. வியர்வையும், கண்ணீரும் நிறைந்த பாதையில் நீங்கள் நடந்திருக்கிறீர்கள். எனவே, நான் உங்களுடன் சேர்ந்து நடக்கவில்லை எனில் அது நியாயமாக இருக்காது.

ராகுல் காந்தி: இந்தியாவில் நடப்பதை எப்படி பார்க்கிறீர்கள். வட இந்தியாவின் பார்வையை விட தென் இந்தியாவின் பார்வை வித்தியாசமாக இருக்கிறதே.

கமல்ஹாசன்: ஆம், சிறிது வித்தியாசமாகதான் இருக்கிறது. அதே சமயம், தலைநகர் டெல்லியும், அசாமும், மேகாலயாவும் கூட இதே பார்வையை தான் கொண்டிருக்கிறது.

நாம் வரலாற்றை மறந்து தற்போது நடப்பதை மட்டுமே எண்ணி கோபம் கொள்கிறோம். நான் தற்போது காந்தியடிகள் குறித்து அதிகம் பேசுகிறேன். ஆனால் முன்பு அப்படி இல்லை.

காந்தியடிகளை மிகவும் விமர்சித்திருக்கிறேன். என் அப்பா ஒரு காங்கிரஸ்காரர். ஆனால், அவர் பெரிதாக ஒன்றும் சொல்ல மாட்டார். வரலாற்றை படி என்பார். எனது 24, 25 வயதில்தான் காந்திஜியை பற்றி தெரிந்து கொண்டேன். அதையடுத்து, இப்போது வரை அவரது மிகப்பெரிய ரசிகனாகிவிட்டேன்.

அதை அடிப்படையாக வைத்தே ஹேராம் படத்தை எடுத்தேன். அந்தப் படத்தில் நானும் ஒரு கொலையாளியாக நடித்தேன். ஹேராம் படம், காந்திஜியை கொல்ல முயல்பவரின் கதை

ஆனால் அவருக்கும் உண்மைக்கும் அருகே செல்ல செல்ல கொலையாளி மாறிவிடுகிறான். ஆனால் அது மிகவும் தாமதம். அவனுடன் இருந்தவர் அதைச் செய்துவிடுகிறார். ஆனால் என்ன அவன் மனம் மாறிவிட்டான். இது தான் ஹேராம் கதை.

இது உங்களின் யோசனையா? என்று ராகுல் காந்தி கேட்க, ஆம், இது என் தந்தையிடம் நான் கேட்கும் மன்னிப்பு என்று கமல் பதிலளித்தார்.

ராகுல்காந்தி: தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் நேசிக்கும் ஒருவனாக இருக்கிறேன். தமிழ்நாட்டுக்கு செல்லும் போதெல்லாம் அங்குள்ள மக்களை இன்னும் சிறப்பாக புரிந்துகொள்ள முயல்வேன். உண்மையில் தமிழர்களின் கருத்து என்ன? தமிழர்களின் உணர்வு எப்படிப்பட்டது?

மகாராஷ்ட்ராவை சேர்ந்த ஒருவருக்கு இருக்கும் உணர்வுதான் தமிழர்களுக்கும் உள்ளது. அதுபோலதான் தெலுங்கர்களும், மலையாளிகளும். நம் அனைவருக்கும் அந்த பெருமை உண்டு.

ஆனால், தமிழ்நாட்டை பற்றி இங்கு நான் கூற வேண்டும். மற்றவர்கள் இதை ஒரு தனித்தீவாக பார்க்கிறார்கள். குறுகிய மனப்பான்மை மற்றும் மொழி வெறி பிடித்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு கிராமத்ததிற்கோ நகரத்துக்கோ சென்று நேரு அல்லது போஸ் என அழைத்து பாருங்கள். நிச்சயமாக ஒரு கறுப்பு மனிதர் திரும்பிப் பார்ப்பார். ஆனால், அவர்களுக்கும், நேருவுக்கும் போஸுக்கும் எந்த உருவ ஒற்றுமையும் இருக்காது.

பல காந்திகளையும் அங்கு பார்க்க முடியும். அதுதான் தமிழக மக்களின் உணர்வு. ஏதோ ஒரு கட்டத்தில் மத்திய அரசு தங்களை புறக்கணிப்பதாக தமிழர்கள் உணர்ந்தார்கள். தற்போது நடப்பதும் அதுதான். ஆனால் அது நிரந்தரம் அல்ல. தற்போது நீங்கள் செய்வதை போல இதை அணுக வேண்டும்.

ராகுல்காந்தி: தமிழக மக்கள் காட்டும் அன்பு என்னை நெகிழ்ச்சியடைய வைக்கிறது ; அவர்கள் காட்டும் அன்பும் பாசமும் மற்ற மாநில மக்களை தாண்டி என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது. தமிழர்கள் அன்பு காட்டும் விதம் உண்மையிலேயே வித்தியாசமானது. இதற்கு என்ன காரணம்?

கமல்ஹாசன் : இது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. மிகப் பழமையான ஒரு கலாச்சாரம். தமிழக மக்கள் பல போர்களை கண்டுள்ளனர். சைன மற்றும் புத்த மதங்களில் இருந்தும் பலவற்றை கற்றுள்ளனர். அது அனைத்தும் சேர்ந்த கலவைதான் இது. இதுபோன்ற அன்பை காமராஜர், எம்ஜிஆர் போன்ற தலைவர்களும் அனுபவித்துள்ளனர்.

தங்கள் தலைவனை காணும் போது மக்கள் கண் கலங்குவதும் குதூகலிப்பதும் நடக்கும்.

ராகுல் காந்தி: தமிழ் மொழியும் தமிழக மக்களுக்கு மிக முக்கியமானது தான் அல்லவா?

கமல்ஹாசன்: ஆம், முக்கியம்தான்.தமிழ்நாட்டில் கடவுளை நம்பாத நாத்திகர்கள் கூட தமிழை போற்றி வணங்குவதை நீங்கள் பார்க்க முடியும்.

ராகுல்காந்தி : தேர்தல்களை மனதில் வைத்து நான் அரசியல் செய்வதில்லை என பலர் கூறுகிறார்கள். தேர்தல்களை இன்னும் சிரத்தையுடன் கையாள வேண்டும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

இளைஞர்கள், பெருவாரியான மக்கள் தொகை. மேற்கத்திய நாடுகளில் தேவைக்கதிகமான வளம் உள்ளது. நாம் சீனாவைப் போல வருவதற்கு நமக்கு மிகப்பெரிய வாய்ப்பிருக்கிறது. அதே சமயம், அரசியலில் இன்னொரு வேலையும் இருக்கிறது.

மக்களை ஒன்றிணைக்க வேண்டும். மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும். மக்களிடம் அன்பு செலுத்த வேண்டும்; அது முக்கியமான வேலை என கருதுகிறேன்.

உலகின் முன்னணி உற்பத்தியாளராக நம்மால் மாற முடியும். மேற்கத்திய நாடுகளிடம் தலை சிறந்த உற்பத்தி நிலையங்கள் உள்ளன. தலைசிறந்த தொழில்நுடபத்தில் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

ஆனால் அவர்களால் பெரிய அளவிலான உற்பத்தியில் சீனாவுடன் போட்டி போட முடியாது. இது தான் பரிதாபத்திற்குரிய நிலை. நாம் தெருக்களில் நடக்கும் போது பார்க்கிறோம். நமது குழந்தைகள் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். ஆனால் நமது விவசாயத்தில் பெரும் வேலைவாய்ப்பு வசதிகள் உள்ளது.

நமது முதல்வர்களையும், தலைவர்களையும் எடுத்து கொண்டால், பல ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்கின்றனர். நினைத்ததை செய்ய நினைக்கின்றனர். மக்களின் எண்ணத்தை கருத்தில் கொள்ளாமல் நடந்து கொள்கின்றனர்.

சீனா தாக்குதல் குறித்து முன்னாள் ராணுவ வீரர்களிடம் பேசினேன். 21ஆம் நூற்றாண்டில் நமது பாதுகாப்பு அத்தனை சிறப்பானதாக இல்லை என்கிறார்கள் . தாக்குதல் எல்லையில் இருந்துதான் வர வேண்டுமென்று இல்லை, உள்ளிருந்தும் வரலாம்.

இணையத் தாக்குதல்கள், ஊடகத் தாக்குதல்கள் என பலவிதமாக நடக்கலாம். 21ஆம் நூற்றண்டில் பாதுகாப்புப் பற்றி நமக்கு ஒரு உலகக் பார்வை வேண்டும்.

அதில் நமது மத்திய அரசு தப்புக் கணக்குப் போட்டுவிட்டதோ என்று தோன்றகிறது. சீனா நமது எல்லையில் 2000 கிலோ மீட்டர்களை ஆக்ரமித்துள்ளது. ஆனால் நாம் அதைப் பற்றி எதுவுமே பேசவில்லை. பிரதமரும் எதுவும் கூறவில்லை என்று ராகுல் காந்தி என கூறினார்.

கமல்ஹாசன் : மத நம்பிக்கையில்லாத, கடவுள் இல்லை என்று என்று சொல்பவர்கள் கூட தமிழைக் கொண்டாடுவார்கள், வணங்குவார்கள். தமிழர்களின் கலாசாரம் மிகவும் தொன்மையானது. தொடர்ந்து விவசாயத்தை உதாசீனப்படுத்துவது தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான் சார்ந்திருக்கும் திரைப்படத்துறையை பற்றி கூறுகிறேன். ஒரு திரைப்படத்தில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதற்கான பயிற்சி மையங்களைப் பார்த்தால் அதற்கென ஒரு ஐடிஐ கூட கிடை யாது. இவ்வாறு அவர் பேசினார்.

புலி தண்ணீர் குடித்து கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பரிசாக கமலுக்கு, ராகுல் காந்தி வழங்கினார். கமல் யாரென்பதை இது பிரதிபலிக்கும். நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை இது குறிக்கிறது. நீங்கள் ஒரு சிறந்த இந்தியர், சிறந்த தமிழர் என அந்த படம் குறித்து விளக்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்