மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்
நாம் சண்டை போட்டு கோர்ட்டுக்கு அலைந்து திரிந்தது போதும், மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழ்நாடு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு:
மேகதாது அணை திட்டம்
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. அதாவது மின் உற்பத்தி, பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த அணையை கட்ட தீர்மானித்து இருப்பதாக கர்நாடக அரசு கூறி வருகிறது.
இந்த அணை திட்டத்தை ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற முடிவு செய்து, அதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம், மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் ஜல்சக்தி துறைக்கும் அனுப்பிவைத்து, அணை கட்ட அனுமதி கோரியுள்ளது. ஆனால் இந்த திட்டத்தால் காவிரி டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கும் எனக் கூறி தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் மேகதாது அணை கட்டும் முடிவில் கர்நாடக அரசு உறுதியாக இருந்து வருகிறது.
டி.கே.சிவக்குமார் பேட்டி
இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பாசனத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவரான துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கடந்த மே மாதம் 30-ந் தேதி, அத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, முந்தைய பா.ஜனதா அரசு மேகதாது திட்டத்திற்கு ஒதுக்கிய ரூ.1,000 கோடியை செலவு செய்யாதது ஏன், அதை வைத்து நிலங்களை கையகப்படுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி அதிகாரிகளை கடிந்து கொண்டார். இந்த திட்டத்திற்கு அனுமதி பெற மத்திய மந்திரியை நேரில் சந்திப்பேன் என்றும் அவா் கூறினார்.
இதற்கு தமிழ்நாடு அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநிலம் கூறியது. இந்த நிலையில் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் டி.ேக.சிவக்குமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனைக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மத்திய அரசு கையில் சாவி
மேகதாது திட்டத்தை அமல்படுத்த கோரி நாங்கள் பாதயாத்திரை நடத்திய பிறகு முந்தைய பா.ஜனதா அரசு இந்த திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் அதை செலவு செய்யவில்லை. எங்களுக்கு தமிழ்நாடு மீது விரோதம் இல்லை. போரிடும் நோக்கமும் இல்லை. அங்கு இருப்பவர்கள் நமது அண்ணன்-தம்பிகள். யார் மீதும் எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது.
மேகதாது எங்களுடைய திட்டம். இதனால் தமிழகத்திற்கு பயன் ஏற்படும். கடலுக்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்தி அதை காவிரி படுகையில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்கு வழங்குவோம். காவிரியில் உள்ள அணைகளின் சாவி மத்திய அரசின் கையில் உள்ளது. தமிழ்நாட்டிற்கு எப்போது எவ்வளவு நீர் வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும்.
சண்டை போட்டது போதும்
கர்நாடகத்தில் மின் உற்பத்தி திட்டத்தை தொடங்குவதால் தமிழக அரசுக்கு என்ன தொந்தரவு ஏற்படுகிறது?. நீரை சேகரித்து குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தினர் ஆதங்கப்பட தேவை இல்லை. இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த தொந்தரவும் கிடையாது. அதனால் தமிழகத்தினருக்கு உயர்ந்த இதயம் இருக்கட்டும்.
கர்நாடகத்தினருக்கு அத்தகைய உயர்ந்த இதயம் இருக்கிறது. நாம் சண்டை போட்டு கோர்ட்டுக்கு அலைந்து திரிந்தது போதும். நல்லிணக்கத்துடன் குடிநீர் மற்றும் தமிழக விவசாயிகளுக்கு பயன் ஏற்படும் இந்த மேகதாது திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.