பீகார் முன்னாள் துணை மந்திரி மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

மறைத்த சுஷில் குமார் மோடி எம்.எல்.ஏ, எம்.எல்.சி, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.

Update: 2024-05-14 07:40 GMT

புதுடெல்லி,

பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான சுஷில்குமார் மோடி (வயது 72), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.

1952-ம் ஆண்டு பிறந்த சுஷில்குமார் மோடி மூன்று தசாப்தங்களாக அரசியல் களத்தில் இருந்தவர். கடந்த 2005 முதல் 2013 வரை மற்றும் 2017 முதல் 2020 வரை பீகார் துணை முதல்மந்திரியாகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகித்தார். இதுதவிர எம்.எல்.ஏ., எம்.எல்.சி., மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தனக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்ததை அடுத்து, 2024 மக்களவை தேர்தலில் இருந்து விலகுவதாக சுஷில் குமார் மோடி சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷில்குமார் மோடி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

சுஷில்குமார் மோடி மறைவுக்கு பிரதமர் மோடி,உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பல தசாப்தங்களாக எனது நண்பராக இருந்தவரான சுஷில் மோடியின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பா.ஜனதாவின் எழுச்சி மற்றும் வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்து, மாணவர் அரசியலில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார். அரசியல் தொடர்பான விஷயங்களை ஆழமாகப் புரிந்துகொண்டவர். ஜி.எஸ்.டி.யை நிறைவேற்றுவதில் அவர் ஆற்றிய பங்கு எப்போதும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான சுஷில் மோடியின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. பீகாரின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணி எப்போதும் நினைவுகூரப்படும் என்றார்.

பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜிதன் ராம் மஞ்சி எக்ஸ் வலைத் தளத்தில் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார். "எங்கள் அன்பு நண்பரும், பீகாரின் முன்னாள் துணை முதல்-மந்திரியும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.,யுமான சுஷில் குமார் மோடி ஜி மறைவுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடியின் மறைவு குறித்து அறிந்ததும் வருத்தம் அடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று மம்தா பானர்ஜி எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.

பீகாரின் முன்னாள் துணை முதல்-மந்திரி மதிப்பிற்குரிய சுஷில் குமார் மோடியின் அகால மறைவு செய்தியைக் கேட்டு ஆழ்ந்த வருத்தமடைகிறேன் என்று தேஜஸ்வி யாதவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்