வாரணாசியில் புல்லட் ரெயில் திட்டத்திற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது - ரெயில்வே மந்திரி தகவல்
வாரணாசியில் புல்லட் ரெயில் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
வாரணாசியில் உள்ள காசி ரெயில் நிலையம் மற்றும் மாளவியா பாலத்தை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "நாட்டில் அதிக புல்லட் ரெயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். வாரணாசியில் புல்லட் ரெயில் தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.
வாரணாசி மாவட்டத்தில் பொருளாதார நடவடிக்கையை அதிகரிக்க காசி ரெயில் நிலையம் ரூ.350 கோடி செலவில் மேம்படுத்தப்படும். காசியின் கலாச்சாரத்தை மனதில் கொண்டு அதன் வடிவமைப்பு செய்யப்படும்.
காசி ரெயில் நிலையத்தை விமானம் மற்றும் நீர் வழித்தடங்களுடன் இணைக்கும் திட்டங்களும் தயாராகி வருகின்றன, அதன் வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வடிவமைப்பு முடிந்ததும், பிரதமர் மோடியின் ஒப்புதலுடன் பணிகள் தொடங்கப்படும்.
கங்கையின் குறுக்கே நான்கு ரெயில் பாதைகள் மற்றும் ஆறு வழி நெடுஞ்சாலையுடன் ஒரு புதிய பாலம் கட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.