இட ஒதுக்கீடு விவகாரம்; பாட்னா ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
பீகாரில் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் அறிவிப்பை ரத்து செய்த பாட்னா ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாட்னா,
பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு சமீபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது. இது சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசு வேலை மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கும் அளவை உயர்த்த மாநில அரசு முடிவு செய்தது.
இதற்கு, மாநில அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அரசு வேலை, கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி., மற்றும் எஸ்டிகளுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவிகிதத்தில் இருந்து 65 சதவிகிதம் ஆக உயர்த்தி சட்டம் இயற்றப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 43 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 20 சதவீதமும், பழங்குடியினருக்கு 2 சதவீதமும் அதிகரித்து சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதனை எதிர்த்து பாட்னா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பாட்னா ஐகோர்ட்டு, இட ஒதுக்கீட்டை உயர்த்தியதை ரத்து செய்து உத்தரவிட்டது. பாட்னா ஐகோர்ட்டின் இந்த உத்தரவினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பீகார் அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாட்னா ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.மேலும் வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பர் மாதம் எடுத்துக்கொள்வதாகவும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறினர்.