ராஜஸ்தானில் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை - தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது

ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த 16 வயது மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-03-08 13:58 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த சூழலில் சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரே ஆண்டில் மட்டும் கோட்டா நகரில் பயின்று வந்த 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்களுக்கு ராஜஸ்தான் அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இந்நிலையில் கோட்டாவில் ஜே.இ.இ.க்கு தயாராகி வந்த 16 வயது மாணவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அந்த மாணவர், கோட்டாவில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வந்துள்ளார். மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் அங்கு சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து மாணவரின் அறையில் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில், "என்னால் ஜே.இ.இ. தேர்வில் வெற்றி பெற முடியாது. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா. நான் முடித்துக் கொள்கிறேன்" என்று எழுதப்பட்டிருந்தது. கடந்த ஓராண்டாக அந்த மாணவர் கோட்டாவில் தங்கி ஜே.இ.இ. தேர்வுக்கு படித்து வந்துள்ளார். கோட்டா நகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 5 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்