பொது அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் தயானந்த் எச்சரிக்கை
முழுஅடைப்பால் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொது அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் தயானந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:-
முழு அடைப்பு
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு கன்னட அமைப்பினர், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு நீர் விடுவிப்பதை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) மாநிலம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 26-ந் தேதி பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டதாக 700-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடக்க உள்ளதால், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
144 தடை உத்தரவு
தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நாளை (இன்று) முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) நள்ளிரவு 12 மணி முதல் 29-ந் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி வரை பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கூட்டமாக யாரும் செல்ல கூடாது. பொது அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தின்போது பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களே பொறுப்பு.
போராட்டத்தில் ஈடுபட யாரையும், யாரும் கட்டாயப்படுத்த கூடாது. மேலும், திறந்து இருக்கும் கடைகளை கட்டாயமாக மூட வைப்பது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு சிட்டி போலீசார் உள்பட மாநில அதிவிரைவுப்படை, ஊர்க்காவல் படை உள்ளிட்ட போலீஸ் பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.