கர்நாடகத்தில் ஆடுகளுக்கு 'நீலநாக்கு' நோய் தடுப்பூசி போட நடவடிக்கை; சட்டசபையில் மந்திரி பிரபுசவான் பதில்

கர்நாடகத்தில் ஆடுகளுக்கு ‘நீலநாக்கு' நோய் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் மந்திரி பிரபுசவான் கூறியுள்ளார்.

Update: 2022-09-20 18:45 GMT

பெங்களூரு:

நீலநாக்கு நோய்

கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஆடுகளை தாக்கியுள்ள நீலநாக்கு நோய் குறித்து பிரச்சினை கிளப்பி பேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பருவமழை பெய்கிறது. அப்போது ஆடுகளை நீலநாக்கு நோய் (புளூடங்க் டிசீஸ்) தாக்குகிறது. அதே போல் தற்போது பாகல்கோட்டை மாவட்டத்தில் ஆடுகளை அந்த நோய் தாக்கியுள்ளது. இது ஆடுகளை கொல்லக்கூடிய அபாயகரமான நோய் ஆகும். அங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு நீலநாக்கு நோய் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசிகள் போதாது

ஆனால் அரசு 50 ஆயிரம் தடுப்பூசிகளை மட்டுமே அனுப்பி வைத்துள்ளன. இந்த தடுப்பூசிகள் போதாது. இன்னும் கூடுதலாக தடுப்பூசிகளை பாகல்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆடுகள் உள்பட கால்நடைகள் விவசாயிகளி்ன வாழ்வாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. கர்நாடகத்தில் மொத்தம் 1¾ கோடி ஆடுகள் உள்ளன.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

இதற்கு கால்நடை வளர்ச்சித்துறை மந்திரி பிரபுசவான் பதிலளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பாகல்கோட்டை, சிக்பள்ளாப்பூர், கோலார், துமகூரு, கொப்பல் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நீலநாக்கு நோய் ஆடுகளுக்கு பரவியுள்ளது. இதை மேலும் பரவாமல் தடுக்க நோய் பாதித்த மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளோம். பாகல்கோட்டை மாவட்டத்திற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகளை அனுப்பியுள்ளோம். இன்னும் கூடுதலாக தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போட தேவை இல்லை. நோய் பாதித்த பகுதிகளில் உள்ள ஆடுகளுக்கு மட்டும் தடுப்பூசிகளை போட்டால் போதுமானது. அதன் அடிப்படையில் ஆடுகளுக்கு நீலநாக்கு நோய் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு பிரபு சவான் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்