உளவு பலூன் விவகாரம்: அமெரிக்கா-சீனா பரஸ்பர குற்றச்சாட்டு
உளவு பலூன் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா-சீனா ஆகிய பரஸ்பர குற்றம் சாட்டியுள்ளன.
பீஜிங்,
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே பறந்த ராட்சத பலூனை கடந்த 4-ந் தேதி அமெரிக்க ராணுவம் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியது. மேலும் அந்த பலூன் அமெரிக்காவின் பாதுகாப்பு தகவல்களை திருட சீனாவால் அனுப்பப்பட்ட உளவு பலூன் என அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டியது. ஆனால் சீனா அதனை மறுத்தது. இந்த விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நீடிக்கிறது.
இந்த நிலையில் உளவு பலூன் விவகாரத்தில் அமெரிக்கா மீது சீனா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தங்கள் வான் எல்லையில் அமெரிக்க பலூன் 10 முறை பறந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் இதுபற்றி கூறுகையில், "கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி தொடங்கி இதுவரை சீன வான் எல்லையில் அமெரிக்கா 10 பலூன்களை பறக்கவிட்டுள்ளது. அந்த பலூன்களை நாம் பொறுப்புடன், தொழில்ரீதியாக அணுகியிருக்கிறோம்" என்றார்.
ஆனால் சீனாவின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, சீனா மீது பதில் குற்றச்சாட்டை கூறியுள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்க அரசு சீனா மீது கண்காணிப்பு பலூன்களை இயக்குகிறது என்ற எந்தவொரு கூற்றும் தவறானது. இது தன் மீதான குற்றச்சாட்டை திசை திருப்பும் சீனாவின் முயற்சி. உளவுத்துறை சேகரிப்புக்கான உயரமான கண்காணிப்பு பலூன் திட்டத்தை சீனா கொண்டுள்ளது. அந்த திட்டத்தை அமெரிக்கா உள்பட 5 கண்டங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் இறையாண்மையை மீற சீனா பயன்படுத்தியது" என குறிப்பிட்டுள்ளார்.