சபரிமலையில் மகரஜோதியை தரிசிக்க 10 இடங்களில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

சபரிமலை பொன்னம்பல மேட்டில் சாமி அய்யப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

Update: 2024-01-12 03:45 GMT

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 15-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 2.46 மணிக்கு மகர சங்ரம பூஜையுடன் தொடங்கி வழக்கமான பூஜைகள், சிறப்பு நெய்யபிஷேக வழிபாடு நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு நடைபெறும் உச்ச பூஜைக்கு பிறகு 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

பிறகு கோவிலை சுற்றி தண்ணீர் தெளித்து சன்னிதானம் முழுவதும் தூய்மை பணி நடைபெறும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு அய்யப்ப சாமி திருவாபரண அலங்காரத்தில் காட்சி அளிப்பார். அப்போது சபரிமலை பொன்னம்பல மேட்டில் சாமி அய்யப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

இந்தநிலையில் மகரஜோதியை காண வசதியாக பக்தர்கள் இப்போதே சபரிமலையின் நாலாபக்கமும் தற்காலிக கூடாரம் அமைத்து தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் மகர ஜோதியை காண வசதியாக பக்தர்களுக்கு சபரிமலையில் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இது குறித்து தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

மகரவிளக்கு தினத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஜோதியை தரிசனம் செய்ய அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. மகரவிளக்கு தினத்தன்று அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மகரஜோதியை தரிசிக்க வசதியாக சபரிமலையில் பாண்டித்தாவளம், குடிநீர்தொட்டியின் முன் பகுதி, பொதுப்பணித்துறை அலுவலகத்தின் முன் பகுதி, பி.எஸ் என்.எல் அலுவலகத்தின் வடக்கு பக்கம், கொப்பரைக் களம், சன்னிதானத்தின் திருமுற்றம், மாளிகைப்புரம் கோவிலின் சுற்று பகுதிகள், அப்பாச்சி மேடு, அன்னதான மண்டபத்தின் முன் பகுதி உள்பட 10 இடங்களை தேர்வு செய்து, அதில் பக்தர்கள் பாதுகாப்புடன் ஜோதியை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடாரம் அமைத்து தங்கியுள்ள பக்தர்கள் தீ பந்தம் கொளுத்தவும், உணவு சமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்