சமாஜ்வாடி மூத்த தலைவர் அசம்கான் எம்.எல்.ஏ. பதவி பறிப்பு

3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றதால் சமாஜ்வாடி மூத்த தலைவர் அசம்கானின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது.

Update: 2022-10-28 22:16 GMT

கோப்புப்படம்

லக்னோ,

சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் அசம்கான் (வயது 74), உத்தரபிரதேசத்தில் ராம்பூர் சதார் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி, அப்போதைய ராம்பூர் மாவட்ட கலெக்டர் ஆகியோரை பற்றி அவர் அநாகரீகமாகவும், வெறுப்புணர்வை தூண்டும்வகையிலும் பேசியதாக புகார் வந்தது.

இந்த வழக்கை விசாரித்த ராம்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் தனிக்கோர்ட்டு, அசம்கானுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், ஒருவரது பதவி பறிபோய்விடும். அதன்படி, அசம்கான், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக உத்தரபிரதேச சட்டசபை செயலகம் நேற்று அறிவித்தது.

ராம்பூர் சதார் தொகுதியை காலியிடமாக அறிவித்தது. அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அசம்கான், தண்டனை காலம் முடிந்த பிறகும் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

Tags:    

மேலும் செய்திகள்