சிக்கிம் சட்டசபை தேர்தல்: முதல்-மந்திரி தமாங் 2 தொகுதிகளில் போட்டி
தமாங், இதற்கு முன்பு 1994- 2004 காலகட்டத்தில் மூன்று முறை சோரெங்-சகுங் தொகுதியில் அப்போதைய ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி வேட்பாளராக வெற்றி பெற்றவர்.;
காங்டாக்:
சிக்கிம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் 2-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், நாடாளுமன்றத் தேர்தலுடன் இந்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. வரும் 19-ம்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் முதல்-மந்திரியும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைவருமான பிரேம் சிங் தமாங் (வயது 56) இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். 2019-ல் அவர் வென்ற போக்லோக்-கம்ராங் தொகுதியில் போட்டியிடாமல், சோரெங்-சகுங் மற்றும் ரெனாக் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
ரெனாக் தொகுதியில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. தமாங் தவிர, தமாங்கின் மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த சோம் நாத் பவுடியால், கபில் பிரசாத் (காங்கிரஸ்), பிரேம் சேத்ரி (பா.ஜ.க.), லட்சுமி ஷர்மா (எஸ்.ஆர்.பி.), டிகா ராம் சர்மா (சி.ஏ.பி.-எஸ்) ஆகியோர் போட்டியில் உள்ளனர். இந்த தொகுதியில் முதல்-மந்திரி தமாங் போட்டியிடுவதால், தற்போதைய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான பிஷ்ணு குமார் போட்டியிடவில்லை. இந்த தொகுதியில் மொத்தம் 18,200 வாக்காளர்கள் உள்ளனர்.
சோரெங்-சகுங் தொகுதியில் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. தமாங் தவிர, பூரன் சிங் சுப்பா (பா.ஜ.க.), ஏ.டி.சுப்பா (எஸ்.டி.எப்.), பாபின் ஹேங் சுப்பா (சி.ஏ.பி.-எஸ்.) ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் 17,789 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வான ஆதித்ய கோலே, தமாங்கின் மூத்த மகன் ஆவார்.
தமாங், இதற்கு முன்பு 1994- 2004 காலகட்டத்தில் மூன்று முறை சோரெங்-சகுங் தொகுதியில் அப்போதைய ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்.) வேட்பாளராக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.