கல்யாண கர்நாடக வளர்ச்சிக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; சித்தராமையா பேச்சு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்யாண கர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-10 22:05 GMT

கலபுரகி:

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்யாண கர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பிரமாண்ட மாநாடு

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவி ஏற்ற பின்பு நேற்று முதல் முறையாக, அவரது சொந்த ஊரான கலபுரகிக்கு வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கலபுரகியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

அத்வானி நிராகரித்து விட்டார்

ஐதராபாத் கர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஐதராபாத் கர்நாடகத்திற்கு 371 ஜே விதிமுறையை அமல்படுத்த வேண்டும் என்று துணை பிரதமராக இருந்த அத்வானியிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் 371 ஜே விதிமுறையை அமல்படுத்த முடியாது என்று அத்வானி நிராகரித்து விட்டார்.

அதன்பிறகு, காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் தான் ஐதராபாத் கர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 371 ஜே விதிமுறையை அமல்படுத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த அனுமதியை பெறுவதற்கு பின்னணியில் மல்லிகார்ஜுன கார்கேவின் பங்கு மிகப்பெரியதாகும்.

ஊழல் மட்டுமே நடக்கிறது

தற்போது ஐதராபாத் கர்நாடகாவின் பெயரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கல்யாண கர்நாடகா என்ற மாற்ற மட்டும் செய்துள்ளார். இந்த பகுதியில் உள்ள மாவட்டங்களின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கவில்லை. யாருக்கும் வேலை வாய்ப்பு கூட கொடுக்கவில்லை. 371 ஜே சட்ட விதிமுறையை காங்கிரஸ் கட்சி அமல்படுத்தியதால் தான் தற்போது இந்த பகுதியில் உள்ள மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறது.

டாக்டர், என்ஜினீயர், அரசு பணிகளை இந்த பகுதி மக்கள் பெறுவதற்கு காங்கிரஸ் எடுத்த நடவடிக்கைகளே காரணம். தற்போது பா.ஜனதா ஆட்சியில் ஊழல் மட்டுமே நடக்கிறது. ஊழலின் கோட்டையாக கர்நாடகத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், பா.ஜனதா தலைவர்களும் மாற்றி விட்டார்கள். விதானசவுதாவின் ஒவ்வொரு சுவர்களிலும் லஞ்சம் கேட்கும் அளவுக்கு மாறி விட்டது.

ரூ.5 ஆயிரம் கோடி நிதி

அரசு பணியில் சேர லஞ்சம், பணி உயர்வுக்கு லஞ்சம், பணி இடமாறுதல் பெற லஞ்சம், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் என ஊழல் மட்டுமே பா.ஜனதா ஆட்சியில் நடக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கல்யாண கர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த பகுதி மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊழலில் மட்டும் கவனம் செலுத்தும் பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்