75-வது வயதையொட்டி சித்தராமையா பிறந்த நாள் பவள விழா; தாவணகெரேயில் இன்று நடக்கிறது

75-வது வயதையொட்டி சித்தராமையா பிறந்த நாள் பவள விழா தாவணெகெரேயில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

Update: 2022-08-02 16:33 GMT

பெங்களூரு:

முதல்-மந்திரி பதவி

கர்நாடகத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு 75-வது வயதையொட்டி அவருக்கு பிறந்த நாள் பவள விழாவை அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பவள விழா தாவணகெரேயில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. மிக பிரமாண்டமான முறையில் நடைபெறும் இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொள்கிறார். இதற்காக அவர் இன்று கர்நாடகம் வந்தார்.

இது தவிர காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த பிறந்த நாள் விழா மாநாடு மூலம் சித்தராமையா தனது பலத்தை வெளிக்காட்ட திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். வருகிற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவியை அடைந்தே தீருவது என்று சித்தராமையா திட்டமிட்டு காய் நகா்த்தி வருகிறார்.

சமையல் கலைஞர்கள்

மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் முதல்-மந்திரி பதவி மீது கண் ைவத்துள்ளார். இதனால் இருவருக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. விழாவில் சுமார் 6 லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வளவு பேருக்கும் இருக்கை வசதி செய்யப்பட்டு இருக்கிறது. மாநிலம் முழுவதும் இருந்து சித்தராமையாவின் ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களில் தாவணகெரேவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். தாவணகெரேயில் ராகுல் காந்தி மற்றும் சித்தராமையாவை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஆங்காங்கே சித்தராமையாவின் சாதனைகள் குறித்த தகவல்கள் அடங்கிய ஒட்டப்பட்டுள்ளன. சித்தராமையா பிறந்த நாள் விழாவில் தாவணகெரே நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்கிறவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் மூலம் உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

செல்வாக்கு மிக்க தலைவர்

முன்பு சித்தராமையாவே அடுத்த முதல்-மந்திரி என்பது தொடர்பாக ஒரு பாடல் உருவாக்கப்பட்டது. அந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அது தீவிரமாக பரவி வருகிறது. பொதுவாக பிறந்த நாளை கொண்டாடாதவர் சித்தராமையா. ஆனால் தனது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளதால் இதற்கு ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

அவர் செல்வாக்கு மிக்க தலைவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அவரே மீண்டும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று அவரது ஆதரவாளர் ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. உள்பட பலரும் வெளிப்படையாக கருத்து கூறி வருகிறார்கள். சித்தராமையாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவால் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் அதிருப்தி அடைந்துள்ளார். கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெறுவதையொட்டி இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்