ஷரத்தா கொலை வழக்கில் ஆதாரத்தை நிரூபிப்பது சவால்; நிபுணர்கள் பரபரப்பு தகவல்

மும்பை மலாடு பகுதியை சேர்ந்த கால்சென்டர் பெண் ஊழியர் ஷரத்தா கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-11-20 08:39 GMT

மும்பை,

26 வயதான ஷரத்தா, வசாயை சேர்ந்த அப்தாப் அமீனை காதலித்து வந்தார். 2 பேரும் வசாயில் சில ஆண்டுகள் ஒன்றாக வசித்து உள்ளனர். பின்னர் டெல்லிக்கு குடிபெயர்ந்து உள்ளனர்.இந்தநிலையில் கடந்த மே மாதம் அப்தாப் அமீனை திருமணம் செய்து கொள்ளுமாறு ஷரத்தா வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து 2 பேருக்கும் இடையே மோதலில், அப்தாப் ஷரத்தாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ஷரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, அதை புதிதாக வாங்கிய குளிர்சாதன பெட்டியில் 3 வாரங்களுக்கு வைத்து உள்ளார். பிறகு அதை கொஞ்சம், கொஞ்சமாக குப்பை தொட்டி, வனப்பகுதிகளில் வீசினார். நள்ளிரவு நேரத்தில் தெருநாய்களுக்கும் அவர் ஷரத்தாவின் உடல்பாகங்களை போட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்து 6 மாதங்கள் ஆகிவிட்டதால் ஷரத்தாவில் உடல்உறுப்புகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஷரத்தா கொலை வழக்கில் தடவியல் நிபுணர்களின் வேலை சவாலானதாக இருக்கும் என அந்த துறையை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். தடயவியல் நிபுணரும், மராட்டிய மாநில மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரக முன்னாள் இயக்குனருமான டாக்டர் பிரவீன் சிங்காரே கூறியதாவது:-

பல மாதங்களுக்கு பிறகு கொலை வழக்கு தொடர்பாக எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த எலும்புகள் பல காலநிலைகளை கடந்துவிட்டன. எனவே அவை சிதைந்து போவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. எலும்பில் இருந்த சதைகள் அழுகி காணாமல் போய் இருக்கும். இது தடவியல் நிபுணர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். மீட்கப்பட்ட எலும்பு மனிதனுடையதா என்பது கண்டறியப்பட வேண்டும். ஆனால் மெடுலரி குழியில் இருந்து டி.என்.ஏ. சிதைவை பெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. அந்த டி.என்.ஏ. சிதைவு பெற்றோர், உடன்பிறந்தவர்கள் டி.என்.ஏ.வுடன் தொடர்புடையதாக இருக்கும். அதே நேரத்தில் எலும்புகளில் சதை இல்லாமல் இருந்தால், உடலில் காயங்கள் இருந்ததா என்பதை கண்டுபிடிக்க கடினமாக இருக்கும். எலும்பு சேதமடையும் அளவுக்கு காயம் ஏற்பட்டு இருந்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


மாநில தடயவியல் ஆய்வகத்தின் முன்னாள் இயக்குனர் பாலாசாகிப் தவுன்ட்கர் கூறியதாவது:-

எலும்புகள் துண்டுகளாக மீட்கப்பட்டுள்ளதால், அதில் இருந்து டி.என்.ஏ.வை கண்டறிவது சவாலானதாக இருக்கும். மேலும் டி.என்.ஏ. கண்டறியப்பட்டாலும் அது ஷரத்தாவின் பெற்றோர், உடன்பிறந்தவர்கள் டி.என்.ஏ.வுடன் ஒத்துபோகவேண்டும். பாலிமிரேஸ் செயின் ரியக்சனில் அது உறுதிப்படுத்தப்பட வேண்டும். எலும்பில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ. ஒத்துபோகவில்லை எனில் வழக்கு விசாரணையில் குற்றத்தை நிரூபிக்க போலீசாருக்கு கடினமாக இருக்கும். எனவே வழக்கை விசாரிக்கும் போலீசார் தடயவியல் ஆய்வுக்கு மிகவும் அனுபவம் வாய்ந்த டி.என்.ஏ./பயோலாஜி தடயவியல் நிபுணரை அணுக வேண்டும். இதற்கு முன் இதுபோன்ற பல வழக்குகளை கையாண்டவர்களை போலீசார் அணுக வேண்டும். இந்த வழக்கை டி.என்.ஏ. மற்றும் தடயவியல் ஆய்வின் முடிவுகள் தான் தீர்மானிக்கும். குற்றவாளி எல்லா ஆதாரங்களையும் அழித்து இருக்க வாய்ப்பு உள்ளது போல தெரிகிறது. உள்ளூர் போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் அவரது வீட்டு மற்றும் எலும்புகள் மீட்கப்பட்ட இடத்தில் ஏதாவது தடயம் கிடைக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். ரத்த கறை, உடல் கசிவு, சிகரெட் பஞ்சு, பாதி தின்ற பழம் உள்ளிட்டவை மூலம் கூட டி.என்.ஏ.வை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

தடவியல் நிபுணரும், மராட்டிய மாநில அறிவியல் ஆலோசகருமான அமோல் தேஷ்முக் கூறியதாவது:-

தற்போது குற்றவாளிகள் தடயவியல் ஆதாரங்களை அழிப்பதை பற்றி எளிதாக இணையதளத்தில் பார்த்துவிடுகின்றனர். இதன் மூலம் அவர்கள் தடயங்களை அழித்துவிடுகின்றனர். ஷரத்தா கொலை வழக்கில் அதுபோல பல செயல்கள் நடந்தது தெரிகிறது. நீளமான எலும்புகள் அதிககாலம் இருக்கும். ஆனால் உடல் துண்டாக்கப்பட்ட சம்பவத்தில் நீண்ட எலும்புகள் கைப்பற்றப்படுவதில்லை. இதன் மூலம் டி.என்.ஏ.வை பெறுவது சவாலானது.இவ்வாறு அவர் கூறினார்.

இதன் மூலம் ஷரத்தா கொலை வழக்கு கிரைம் நாவலை போல மர்மங்கள் நிறைந்து பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்