வெள்ளநீர் சூழ்ந்த வீடுகளில் பல லட்சம் ரூபாய் தங்க, வைர நகைகள் கொள்ளை
பெங்களூருவில் வெள்ளநீர் சூழ்ந்த வீடுகளில் பல லட்சம் ரூபாய் தங்க, வைர நகைகள் கொள்ளையடித்து சென்றனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெல்லந்தூர், சர்ஜாப்புரா, வெளிவட்ட சாலை போன்ற பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டல்களிலும், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் ரெயின்போ லே-அவுட்டில் வசித்து வரும் தொழில் அதிபரான தர்மதேஜா, உதய் பாஸ்கர் மற்றும் மஞ்சுநாத் ஆகிய 3 பேரின் வீடுகளிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
தர்மதேஜாவின் வீட்டில் இருந்து 10 ஜோடி தங்க கம்மல்கள், வளையல்கள், தங்கச்சங்கிலிகளையும், மஞ்சுநாத் வீட்டில் இருந்து தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளையும், உதய் பாஸ்கர் வீட்டில் இருந்து வைர சங்கிலிகள், 3 வெள்ளி ஆபரணங்கள், 3 தங்க மோதிரங்கள், விலை உயர்ந்த பொருட்களையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து பெல்லந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.