உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி; யோகி அரசு அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2022-12-12 01:03 GMT



லக்னோ,


உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் நோக்கில் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இந்த விசயத்தில் பூஜ்ய சகிப்பின்மை கொள்கையை அரசு கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ராணி லட்சுமி பாய் பயிற்சி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது.

இதுபற்றி பள்ளி கல்வி இயக்குனர் ஜெனரல் விஜய் கிரண் ஆனந்த் விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளார். இதன் முக்கிய நோக்கம், மாணவிகள் மனம் மற்றும் உடலளவில் சுய சார்புடன் திகழ வேண்டும் என்பது ஆகும்.

இந்த கட்டாய பயிற்சியானது டிசம்பரில் தொடங்கி 2023-ம் ஆண்டு பிப்ரவரி வரை அனைத்து மாணவிகளுக்கும் வழங்கப்படும். பயிற்சியின்போது, தலைமை ஆசிரியர் ஒருவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளார். ஆசிரியர் ஒருவரும், மாணவிகளுக்கான பயிற்சி பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவார்.

முதல் வாரத்தில் பயிற்சி நடவடிக்கைகளுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டங்கள் மற்றும் உதவி எண்கள் உள்ளிட்டவற்றை பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்