கர்நாடகத்தில் ரூ.61 கோடி ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல்

சட்டசபை தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.61 கோடி ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Update: 2023-04-04 21:15 GMT

பெங்களூரு:

சட்டசபை தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.61 கோடி ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கா்நாடக தலைமை தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பறக்கும் படைகள்

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க மாநிலத்தில் பல பகுதிகளில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார், தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த சோதனையில் இதுவரை ரூ.60 கோடியே 99 லட்சத்து 92 ஆயிரத்து 894 மதிப்புள்ள ரொக்கம், தங்கம், வெள்ளி, மதுபானம், பல்வேறு பரிசு பொருட்கள், போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.17 கோடியே 36 லட்சத்து 4 ஆயிரத்து 76 ரொக்கம், ரூ.22 கோடியே 35 லட்சத்து 85 ஆயிரத்து 130 மதிப்புள்ள மதுபானம், ரூ.42 லட்சத்து 66 ஆயிரத்து 910 மதிப்புள்ள போதைப்பொருள், ரூ.8 கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 733 மதிப்புள்ள 22½ கிலோ தங்க நகைகள், ரூ.65 லட்சத்து 19 ஆயிரத்து 560 மதிப்புள்ள 93½ கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

415 வழக்குகள் பதிவு

ரூ.11 கோடியே 69 லட்சத்து 55 ஆயிரத்து 485 மதிப்புள்ள பல்வேறு பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து இதுவரை 415 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 37 ஆயிரத்து 462 உரிமம் பெற்ற துப்பாக்கிகளை சம்பந்தப்பட்டவர்கள் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்