கடலில் மீன் பிடிக்க சென்றபோது சோகம்; படகு கவிழ்ந்து மீனவர் சாவு

கடலில் மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்து மீனவர் உயரிழந்தார். மேலும் 2 பேர் நீந்தி கரை சேர்ந்தனர்.

Update: 2022-07-23 14:54 GMT

மங்களூரு;

உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா பரம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் சுமந்த் (வயது 24). மீனவரான இவர் அதே பகுதியை சேர்ந்த பிரஜ்வல், சந்தீப் ஆகிய 2 பேருடன் சேர்ந்து பிரம்மாவர் அருகே உள்ள கடலில் மீன் பிடிப்பதற்காக நாட்டுப்படகில் சென்றார்.

அவர்கள் கரையில் இருந்து சிறிது தூரம் உள்ளே சென்று கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலையால் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 3 பேரும் கடலுக்குள் விழுந்தனர். அவர்கள் 3 பேரும் நீச்சல் அடித்து கொண்டே, கரையில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர்.

இதற்கிடையே பிரஜ்வல், சந்தீப் ஆகிய 2 பேரும் நீச்சல் அடித்து கரையை வந்தடைந்தனர். இந்த நிலையில் சுமந்த் மட்டும் நீச்சல் அடிக்க முடியாமல், கடலில் மூழ்கி பலியானார். இதற்கிடையே கரையில் இருந்தவர்கள் உடனடியாக அங்கிருந்த படகு மூலம் கடலில் மூழ்கிய சுமந்தை மீட்டனர்.

மேலும் சிகிச்சைக்காக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டா் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டா போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

மேலும், அவர்கள் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரஜ்வல் மற்றும் சந்தீப்பிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்